சிறிய நிறுவனங்கள் வேலையிடக் கலாசாரத்தை மேம்படுத்தவும் தங்கள் ஊழியர்களுடனான ஈடுபாட்டை முதலாளிகள் அதிகரிக்கவும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முக்கிய விவகாரங்களை எதிர்கொள்ள உதவும் ‘யூ எஸ்எம்இ’ (U Small and Medium Enterprises) இந்தத் தளத்தை அமைத்துள்ளது.
Build Your Own Party எனப்படும் இந்தத் தளம், ஊழியர்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவது போன்ற நிறுவன நடவடிக்கைகளுக்கான வளமாக விளங்குகிறது.
என்டியுசி ‘யூ எஸ்எம்இ’ திட்டம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் சேர அல்லது தங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடவும் நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து அவற்றின் ஊழியர்களிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்தத் தளம் ஏற்படுத்தப்பட்டது. நிறுவன நடவடிக்கைளுக்குத் திட்டமிட நேரத்தையும் வளங்களையும் ஒதுக்க சவாலாக இருந்ததாக ஊழியர்கள் கூறியிருந்ததாக என்டியுசியும் ‘யூ எஸ்எம்இ’யும் வியாழக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தன.
‘யூ எஸ்எம்இ’யின் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்க வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியையொட்டி இந்தத் தளம் அறிமுகம் கண்டுள்ளது.
2024ல் ஏறக்குறைய 500 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் என்டியுசி ‘யூ எஸ்எம்இ’ கட்டமைப்பில் சேர்ந்துள்ளதைத் தொடர்ந்து அதன் மொத்த எண்ணிக்கை 1,500ஐத் தாண்டியுள்ளது.
தொழிலாளர் இயக்கத்தில் சேர்வதன் அனுகூலங்களை நிறுவனங்கள் தெரிந்துகொள்ள இந்தக் கட்டமைப்பு வழிவகுக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து பேசிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், “நம் ஊழியரணியில் சிறிய, நடுத்தர நிறுவன ஊழியர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். மொத்த வேலை நியமனத்தில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் 70 விழுக்காட்டுக்குமேல் பங்கு வகிக்கின்றன,” என்றார்.