தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தில் குடியிருப்பாளர் விலைச் சலுகை, பொழுதுபோக்கு வசதிகள்

3 mins read
269155c2-f978-415a-b52e-ddaf1a915d38
ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தில் இடம்பெறும் புதிய வசதிகள் குறித்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அறிவித்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஈஸ்ட் கோஸ்ட் திட்டத்தின்கீழ் புதிய பொழுதுபோக்கு வசதிகள் இடம்பெற உள்ளன.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ள மூன்று வட்டாரங்கள் அதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

அந்தத் தொகுதியின் அமைச்சரும் துணைப் பிரதமருமான ஹெங் சுவீ கியட் ஈஸ்ட்கோஸ்ட் திட்டத்தின் ஆக அண்மைய நடவடிக்கைகளை அறிவித்தார்.

தேர்தல் தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்ட ஒருசில நாள்களில் அவரின் அறிவிப்பு இடம்பெற்று உள்ளது.

ஹார்ட்பீட்@பிடோக்கில் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெற்ற சீனப் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரு ஹெங் பேசினார்.

பிடோக்கில் ‘பிளேஹப்’ என்ற பெயரில் அமைய இருக்கும் புதிய பகுதியில் விளையாட்டுத் திடல், உடற்கட்டு மையம் ஆகியவற்றுடன் செல்லப் பிராணிகளுக்கான இடமும் இருக்கும் என்றார் அவர்.

அந்தப் புதிய வசதிகளை அமைப்பதற்காக தற்போது மூன்று பகுதிகளில் இயங்கி வரும் அம்சங்கள் விடைபெறும்.

பிடோக் சௌத் ரோட்டில் புளோக் 6 மற்றும் புளோக் 15 அருகே உள்ள இடம், பிடோக் நார்த் ஸ்திரீட் 2ல் உள்ள புளோக் 135 மற்றும் புளோக் 138 அருகே உள்ள பகுதி, பிடோக் நார்த் ஸ்திரீட் 4ல் உள்ள புளோக் 84ன் அருகே உள்ள பகுதி ஆகியவற்றில் செயல்பட்டுவரும் பலநோக்கு மையம் மற்றும் ஆம்ஃபிதியேட்டர் போன்ற வசதிகளுக்கு மாற்றாக “பிளேஹப்’ அமையும்.

பிளேடிரெய்ல் நெட்வொர்க் என்று அழைக்கப்படும் பசுமை சூழ்ந்த புதிய நடைபாதைக் கட்டமைப்புடன் ‘பிளேஹப்’ இணைப்பை ஏற்படுத்தும்.

ஈஸ்ட் கோஸ்ட் திட்டம் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது முதல் ஐந்தாண்டுகளாக நடைபெற்று வரும் சமூக உள்கட்டமைப்பு மேம்பாடுகளுடன் இந்தப் புதிய அம்சமும் சேர்ந்துகொள்ளும்.

2020 பொதுத் தேர்தல் நியமன நாள் அன்று அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை துணைப் பிரதமர் ஹெங் வெளியிட்டார்.

முன்னைய கம்போங் சாய் சீ சமூக மன்றத்தில் புதிய சமூக நடுவம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையே, பலதரப்பட்ட குடியிருப்பாளர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் வண்ணம் ஈஸ்ட் கோஸ்ட் திட்டம் விரிவானதாகவும் ஆழமானதாகவும் அமையும் என ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி அலுவலகம் சனிக்கிழமை (ஜனவரி 25) தனது அறிக்கையில் கூறியது.

அதற்கேற்ற வகையில் 2020ஆம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளும் திட்டங்களும் அந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.

உதாரணத்திற்கு, நடமாட்டப் பிரச்சினைகள் உள்ளோருக்கு சக்கர நாற்காலி, மூத்தோர் மின்னிலக்கத் திறன் பெறுவதற்கான பயிலரங்குகள், பெண்கள் விஞ்ஞான, தொழில்நுட்பத் திறன் பெறுவதை ஊக்குவிப்பதற்கான கல்வி உதவி நிதி போன்றவை சில.

குடியிருப்பாளர்களின் வாழ்க்கைச் செலவினத்திற்கு உதவும் வகையில் 200=100@ஈஸ்ட் கோஸ்ட் நடவடிக்கையும் குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானக் குடியிருப்பாளர்கள் அரிசி, முட்டை, சமையல் எண்ணெய் போன்ற மளிகைப் பொருள்களை பாதி விலைக்கு வாங்கலாம் என்பது அந்த நடவடிக்கையின் சிறப்பு.

அந்த உதவித் தொகையின் வரம்பு $200. மேலும் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒருமுறையும் அந்தச் சலுகை இடம்பெறும். பிப்ரவரி மாதம் முதல் 800 குடும்பங்கள் வரை அதில் பலனடையும்.

குறிப்புச் சொற்கள்