வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவர் பதவி விலக முடிவு

2 mins read
66812164-7e5e-44ab-aa11-82b96401ad4f
புதிய தலைவரான தினேஷ் திலான் மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாததால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மையில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் சிங் திலான், உறுப்பினர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பதவி விலக முன்வந்துள்ளார்.

டிசம்பர் 17ஆம் தேதி சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் பதவி விலக முன்வந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 21 உறுப்பினர்களைக் கொண்ட மன்றத்தின் பெரும்பாலானவர்களால் திரு திலான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2026ல் லிசா சாம் ஹுய் மின்னுக்குப் பிறகு அவர் அப்பொறுப்பை ஏற்கவிருந்தார்.

ஆனால், மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாத அவரை தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியமான மூத்த உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிசம்பர் 22ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த சிறப்புப் பொதுக்கூட்டத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரவும் அதிருப்தியாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்துள்ள ஆவணத்தில், வழக்கறிஞர் சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகத் திரு திலான் ஒப்புக் கொண்டுள்ளதாக மன்றம் குறிப்பிட்டிருந்தது.

2026ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் துணைத் தலைவர் டான் செங் ஹானை அமைப்பின் தலைவராகக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் டான், பல பொறுப்புகளில் இருந்து வருகிறார். வோங் பார்ட்னர்ஷிப் சட்ட நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக இருக்கிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் தலைமை உத்தி வகுப்பாளராகவும் அவர் பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் ஆலன் அண்ட் கிளெட்ஹில் சட்ட நிறுவனத்தில் அனைத்துலக நடுவர் மன்றச் சட்டம் தொடர்பான வழக்குகளின் பிரிவுக்கு இணைத் தலைவராக இருக்கும் திரு திலான் மன்றத்தின் துணைத் தலைவராக அங்கீகரிக்கப்படவிருக்கிறார்.

சிங்கப்பூரில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் சங்கம் பிரதிநிதிக்கிறது. இதில் ஏறக்குறைய 6,400 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

வழக்கறிஞர் சங்க மன்றம், பொதுவாக 15 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். சட்டத் தொழில் சட்டத்தின்படி மூன்று உறுப்பினர்களைச் சட்ட அமைச்சரால் நியமிக்க முடியும். அப்படி மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டவர் திரு தினேஷ். அனைத்து மன்ற உறுப்பினர்களும் இரண்டு ஆண்டு தவணைக் காலத்திற்குப் பொறுப்பு வகிப்பர்.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி சங்கத்தின் முன்னாள் தலைவர்களான பீட்டர் குத்பெர்ட் லோ, சந்திரா மோகன் நாயர் ஆகியோர் தலைமையில் பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உடனடியாகப் பொதுக் கூட்டத்தை கூட்ட வேண்டுகோள் விடுத்தனர்.

வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

வழக்கறிஞர் மன்றத்தின் ஆவணத்தில், வழக்கறிஞர் சங்கத்திற்கு பங்களிப்பதற்கு நல்லெண்ணத்துடனும் தனது சொந்த விருப்பத்துடனும் திரு தினேஷ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிந்தது.

திரு தினேஷின் திறன் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பேராசிரியர் டான் செங் ஹான் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.
பேராசிரியர் டான் செங் ஹான் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்