குழந்தைகளின் கல்விப் பயணத்தில் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலர் பள்ளிக் கல்வியாளர்களை அங்கீகரிக்கும் வகையில், 2027ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கான அதிபர் விருது அறிமுகம் காணும்.
சொந்தப் பணிகள் மற்றும் நிறுவனங்களைத் தாண்டி பாலர் கல்விச் சூழலில் தாக்கம் ஏற்படுத்தியோர் அதிபர் விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
மரினா பே சேண்ட்சில் உள்ள சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 26) நடைபெற்ற பாலர் பள்ளிக் கல்வியாளர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பேசிய திரு மசகோஸ், அதிபர் விருது இத்துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த தனிநபர் கௌரவமாகும் என்று கூறினார்.
“நீடித்த, ஆக்ககரமான விளைவை ஏற்படுத்துபவர்கள், நமது நாட்டின் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறத் தகுதியானவர்கள்,” என்றார் அவர்.
இவ்வாண்டின் தேசிய தினப் பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங் குடும்பங்களுக்கான கூடுதல் உதவியை அறிவித்ததைப் பற்றித் திரு மசகோஸ் பேசினார்.
“தரம் நமது துறையின் மையமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பாலர் பள்ளியில் இடம் கிடைப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கமும் கிடைக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அவருடன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங்கும் கலந்துகொண்டார்.
பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் புதிய ‘தரமான பாலர் பள்ளிகள் 2030’ ஆலோசனைக் குழுவுக்குத் திரு கோ தலைமை தாங்குகிறார்.
கொள்கை, ஆராய்ச்சி, கற்பித்தல் முறை ஆகிய துறைகளில் அனைத்துலக அளவில் அங்கீகாரம் பெற்ற ஐந்து வல்லுநர்களை இந்தக் குழு ஒன்றிணைக்கிறது. அவர்கள் சிங்கப்பூர் பாலர் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த அமைப்புக்கு உதவிக்கரம் நீட்டுவர்.
14வது கொண்டாட்ட நிகழ்ச்சியில் 28 பாலர் பருவத் துறை வல்லுநர்களுக்கும் மையங்களுக்கும் திரு மசகோஸ் விருதுகளை வழங்கினார்.
விருது பெற்ற பாலர் பள்ளிக் கல்வியாளர்களில் ஒருவரான ஷரிஹா சுரேஷ், 29, இந்தத் துறையில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கப்படுத்திய ஒரு மாணவரின் கதையைப் பகிர்ந்துகொண்டார்.
“அந்த மாணவர் மிகவும் கூச்சப்படும் இயல்புள்ளவர் என்பதையும் மற்ற குழந்தைகளுடன் அவர் சேர்ந்துகொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தேன்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
ஆழ்ந்த கவனிப்பு, தனிப்பட்ட விளையாட்டுகள் மூலம், அக்குழந்தையின் ஆர்வங்களும் திறமைகளும் வெவ்வேறு கற்றல் முறைகளில்தான் உள்ளன என்பதை ஷரிஹா உணர்ந்துகொண்டார்.
“குழந்தைகள் என் பெயரை நினைவில் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. தங்களுக்குப் பாதுகாப்பையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் ஆசிரியராக என்னை நினைவில் கொண்டாலே போதும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
