வரும் 2027ஆம் ஆண்டு 49 பள்ளிகளில் புதிய முதல்வர்கள் பொறுப்பில் இருப்பர்.
அவர்களில் 13 பேர் முதன்முறையாக அப்பொறுப்பை வகிக்கவுள்ளனர். சம்பந்தப்பட்ட 49 முதல்வர்களில் எழுவர் தற்போது கல்வி அமைச்சின் தலைமையகத்தில் பணியாற்றிவருகின்றனர்.
புதிய நியமனங்களைக் கல்வி அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 7) அறிவித்தது. அதன்படி, ஒரு தொடக்கக் கல்லூரி, 15 உயர்நிலைப் பள்ளிகள், 33 தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றுக்குப் புதிய முதல்வர்கள் நியமிக்கப்படுவர்.
டிசம்பரில் அதிகாரபூர்வ நியமிப்பு
புதிய முதல்வர்களைக் கல்வி அமைச்சு வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாரபூர்வமாக நியமிக்கும். ஆண்டுதோறும் நடத்தப்படும் அமைச்சின் பதவி நியமன, நன்றி தெரிவிப்புச் சடங்கில் அந்நிகழ்வு இடம்பெறும்.
புதிய முதல்வர் நியமிக்கப்படும் ஒரே தொடக்கக் கல்லூரி நன்யாங் தொடக்கக் கல்லூரியாகும். தற்போது செயின்ட் கேப்ரியல்ஸ் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பு வகிக்கும் ஷோன் லிம் சீ கூன், நன்யாங் தொடக்கக் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்பார்.
உயர்நிலைப் பள்ளி நியமினங்கள்
முதன்முறையாக முதல்வராக நியமிக்கப்படவிருப்போரில் அறுவர் உயர்நிலைப் பள்ளி முதல்வர்களாக நியமிக்கப்படவுள்ளனர். தற்போது பிரெசிபிட்டேரியன் ஹை பள்ளியின் திமத்தி டே சூன் இன்னும் அவர்களில் ஒருவராவார். அவர் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
மற்ற ஐவர் சிஎச்ஐஜே காத்தோங் கான்வென்ட், சிஎச்ஐஜே செயின்ட் தெரேசாஸ் கான்வென்ட், ஈஸ்ட் ஸ்பிரிங் உயர்நிலைப் பள்ளி, செங் காங் உயர்நிலைப் பள்ளி, ஈசூன் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் முதல்வர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
தொடக்கப் பள்ளி நியமனங்கள்
முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்கவிருப்போரில் ஐவர் தொடக்கப் பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ளனர். பிடோக் கிரீன் தொடக்கப் பள்ளி, ஃபூஹுவா தொடக்கப் பள்ளி, கான் என் செங் தொடக்கப் பள்ளி, ஜெய்மின் தொடக்கப் பள்ளி, லியான்ஹுவா தொடக்கப் பள்ளி, பாம் வியூ தொடக்கப் பள்ளி, சி லிங் தொடக்கப் பள்ளி ஆகியவை அந்தப் பள்ளிகளாகும்.
பல்வேறு அனுபவம்வாய்ந்த பள்ளித் தலைவர்கள், கல்வி அமைச்சின் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஆகியோர் முதல்வர்களாகப் பொறுப்பேற்கவுள்ளனர்.
அவர்களில் ஒருவரான சர்மா பூனம் குமாரி, ரார்த்லைட் பள்ளி முதல்வராக நியமிக்கப்படவுள்ளார். தற்போது அவர் கல்வி அமைச்சின் பள்ளிகள் பிரிவுக் குழும சூப்பரின்டென்டென்டாகப் பணியாற்றுகிறார்.
