இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வலுவான வளர்ச்சி கண்ட புதிய தனியார் வீட்டு விற்பனை மே மாதத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.
உலகளாவிய நிச்சயமற்ற பொருளியல் சூழலுக்கு இடையே, மே மாதத்தில் ஒரே ஒரு புதிய தனியார் வீடமைப்புத் திட்டம் மட்டுமே அறிமுகம் கண்டது. ‘ஹட்சன் பிளேஸ் ரெசிடென்சஸ்’ எனும் அந்த வீடமைப்புத் திட்டம் 327 வீடுகளைக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,426 புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அதற்கடுத்த மாதத்தில் அத்தகைய 357 வீடுகள் விற்பனைக்கு வந்தன.
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் 1,548 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்ட நிலையில், மே மாதத்தில் 447 வீடுகளே விற்கப்பட்டன.
அதே நேரத்தில், 2025 மே மாதம் விற்பனையான 312 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 43 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியாகும்.
இந்நிலையில், வீடுகளுக்கான தேவை குறையவில்லை என்றும் புதிய திட்டங்கள் அறிமுகமாகும் நேரத்தைப் பொறுத்தே விற்பனை அளவு மாறுபடும் என்றும் ‘சிங்கப்பூர் ரியால்ட்டர்ஸ் இன்க்’ நிறுவனத்தின் ஆய்வு, தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் மோகன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
புறநகர்ப் பகுதியில் அமையும் புதிய தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்குத் தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒன் நார்த் பகுதியில் 327 வீடுகளுடன் மே மாதம் அறிமுகம் கண்ட ‘ஹட்சன் பிளேஸ் ரெசிடென்சஸ்’ வீடமைப்புத் திட்டத்தில் கிட்டத்தட்ட 64 விழுக்காட்டு வீடுகள், அதாவது 209 வீடுகள் சதுர அடிக்கு $2,465 என்ற இடைநிலை விலைக்கு விற்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைப் பொறுத்தமட்டில், மே மாதம் 46 புதிய வீடுகள் விற்கப்பட்டன. அதற்கு முந்திய மாதத்தில் இந்த எண்ணிக்கை 101ஆகப் பதிவானது.
அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய விதிமுறைகளால், பாசிர் ரிஸ் பகுதியில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட ‘கோஸ்டல் கபானா’ வீடமைப்புத் திட்டத்தில் வீடு வாங்கப் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால், மே மாதத்தில் அங்கு 29 வீடுகள் சதுர அடிக்கு $1,827 என்ற இடைநிலை விலையில் விற்பனையாகின.
எதிர்கால வீடமைப்புத் திட்டங்களில் முதன்முறை வீடு வாங்குவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனப் புதிய விதிமுறைகள் கூறுகின்றன.
ஆயினும், உட்லண்ட்ஸ் டிரைவ் 17, செஞ்சா குளோஸ், செம்பவாங் பகுதிகளில் அமையவிருக்கும் மூன்று புதிய எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டங்களுக்கு அப்புதிய விதிகள் பொருந்தா.

