சிங்கப்பூரில் புதிய தனியார் வீட்டு விற்பனை தொடர்ந்து மூன்றாவது மாதமாக அக்டோபர் மாதத்தில் குறைந்தது. சொத்துச் சந்தையில் புதிய வீட்டு விற்பனை நடவடிக்கைகள் இல்லாததே இதற்குக் காரணமாக கருதப்படுகிறது.
எக்ஸிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர, அக்டோபர் மாதம் 203 வீடுகளை சொத்துச் சந்தை நிறுவனங்கள் விற்பனை செய்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 35.4 விழுக்காடு குறைவு. இவ்வாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதத்தில் தனியார் வீட்டு விற்பனை 6.5 விழுக்காடு சரிந்தது. செப்டம்பர் மாதம் 217 தனியார் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
“அதிகமாக புதிய வீட்டு விற்பனைத் திட்டங்கள் அறிவிக்கப்படாததாலும், நவம்பரில் புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு வரும் என்று வீடு வாங்குவோர் காத்திருந்ததாலும் அக்டோபர் மாதத்தில் விற்பனை குறைந்தது,” என ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் மூத்த இயக்குநர் லீ ஸ்ஸே டெக் கூறினார்.
கடந்த வாரம் விற்பனைக்கு வந்த லென்டோர் வட்டாரத்தின் ஹில்லாக் கிரின், ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தின் ஜே’டன் ஆகிய புதிய தனியார் வீட்டு விற்பனைத் திட்டங்களை மேற்கொள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
அவருடைய இந்தக் கூற்றை மற்ற நிபுணர்களும் ஒப்புக்கொண்டனர். தனியார் வீடு வாங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த இரண்டு திட்டங்களால் தனியார் வீட்டு விற்பனை இம்மாதம் அதிகரிக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

