புதிய தனியார் வீட்டு விற்பனை ஜூலையில் சரிவு

2 mins read
15e63d24-1338-47f2-b2e5-ed34113fc672
சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் 571 தனியார் வீடுகள் விற்பனையாயின.  - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் 571 தனியார் வீடுகள் விற்பனையாயின.

கடந்த ஆண்டு ஜூலையில் ஓராண்டுக்கு முன்னர் விற்கப்பட்ட 1,413 வீடுகளைக் காட்டிலும் அது 59.6 விழுக்காடு குறைவு என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.

எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து, ஆக அண்மைய விற்பனை எண்ணிக்கை 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கையாகும். 2014ஆம் ஆண்டு ஜூலையில் 511 வீடுகள் கைமாறின.

அதோடு, ஆக அண்மைய விற்பனை எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் அதே மாதத்தில் சராசரியாக விற்கப்பட்ட 1,280 வீடுகளைக் காட்டிலும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஜூலையில் பதிவான 571 பரிவர்த்தனைகள், ஜூன் மாதம் விற்பனையான 228 வீடுகளைக் காட்டிலும் ஒரு மடங்குக்குமேல் அதிகம்.

எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைச் சேர்த்தால், ஜுலையில் விற்பனைக்கு விடப்பட்ட 616 வீடுகளில் 608 விற்பனையாயின.

சென்ற ஆண்டு அதே மாதத்தில் 2,156 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அவற்றில் 1,472 வீடுகள் விற்பனையாயின. ஒப்புநோக்க, இவ்வாண்டு ஜூன் மாதம் 278 வீடுகள் விற்கப்பட்டன.

மூன்று சந்தைப் பிரிவுகளில், கூட்டுரிமை, தனியார் வீட்டு விற்பனையைப் பொறுத்தவரை, நகர்ப்புற மத்திய வட்டாரம் ஜூலையில் 77.8 விழுக்காட்டு விற்பனையுடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

சென்ற மாதம் மத்திய வட்டாரத்தின் எஞ்சிய பகுதிகளில் 18.6 விழுக்காட்டு விற்பனையும், முக்கிய மத்திய வட்டாரத்தில் 3.7 விழுக்காட்டு விற்பனையும் பதிவாயின.

இந்நிலையில், புறநகர்ப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வீட்டுத் திட்டங்கள், ஜூன் மாதத்தைக் காட்டிலும், ஜூலை மாதத்தில் புதிய தனியார் வீட்டு விற்பனை மீண்டு வருவதற்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள அரிதான ‘ஃபிரீஹோல்ட்’ திட்டமும் அடங்கும்.

ஜூலை மாதத்தின் புதிய வீட்டு விற்பனையில் 45 விழுக்காடு, யுவான் சிங் ரோட்டில் உள்ள 440 வீடுகளைக் கொண்ட ‘சோரா’ வீட்டுத் திட்டத்திலும், ஃபுளோரா டிரைவில் உள்ள ‘காசியா’ வீட்டுத் திட்டத்திலும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்