கல்விக்கூட உணவு நிலையங்களிலிருந்து அதிகமான கடைகள் வெளியேறுவதால் அந்த நிலையங்களில் ஏற்படும் காலி இடங்களை நிரப்புவது வருங்காலத்தில் சவால்மிக்கதாக இருக்கும்.
அதனால், பள்ளிக்கூடங்கள் அவற்றின் உணவுவிடுதிகளை நடத்துவதில் புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்கான ஆலோசனைகளில் கல்வி அமைச்சு ஈடுபட்டு உள்ளது.
உணவுக் கடைகளைக் கண்டறிவது சில பள்ளிகளுக்குச் சிரமமாக உள்ளது என்பதை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஒப்புக்கொண்டார்.
அதன் காரணமாக, மாறுபட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தயாராகும் ஆர்வமிக்க பள்ளிகளுடன் தமது அமைச்சு ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
அந்த மாறுபட்ட நடைமுறைகளில், பொதுவான சமையலறையில் உணவைத் தயார் செய்து பள்ளிகளுக்கு வழங்கலாம் என்பதும் ஒன்று.
அந்த முன்னோடி நடைமுறை யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டு ஆற்றலுடன் செயல்படுவதாக திரு சான் தெரிவித்தார்.
“புதிய நடைமுறையால் தற்போது உணவுநிலையங்களில் கடை நடத்துவோர் பாதிக்கப்படும் வேளையில் பள்ளிக்கூடங்கள் அவர்களுக்கு உதவி புரியும்.
“அருகில் உள்ள வேறு பள்ளிக்கூடங்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கப்படலாம் அல்லது பொதுவான சமையலறையுடன் இணைந்து பணியாற்ற யோசனை கூறப்படலாம்,” என்றும் அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளிக்கூட உணவுநிலையங்கள் தொடர்பாக செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர்கள் லூயிஸ் சுவா, ஹி டிங் ரு, இயோ சூ காங் தொகுதி எம்.பி. யிப் ஹொன் வெங் ஆகியோர் அந்தக் கேள்விகளை கேட்டிருந்தனர்.
அதிகரிக்கும் விலைவாசியை ஈடுசெய்யும் வகையில் பள்ளிக்கூட உணவு விடுதிகளில் கடை நடத்துவோருக்கு நேரடி உதவித்தொகை வழங்குவதற்கான சாத்தியம் பற்றி திரு சுவா வினவி இருந்தார்.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள பள்ளிக்கூடங்கள் பொருத்தமான உணவுவிடுதி கடைக்காரர்களைக் கண்டறிவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மாற்று வழிகளை அவை ஆராய்ந்து வருவதாகவும் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

