சிங்கப்பூர், கடல்நீரைக் குடிநீராக்கும் செயல்முறையில் சுத்திகரிப்புக்குத் தேவைப்படும் ஆற்றலைப் பாதியாகக் குறைக்கக்கூடிய புதிய முறையை சோதித்து வருகிறது.
கடல்நீரிலிருந்து அசுத்தங்களை அகற்ற தற்போது மூன்றுகட்ட சுத்திகரிப்பு முறை யன்படுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, ஜப்பானிய நிறுவனமான ‘மெய்டன்’ உருவாக்கிய பீங்கான் சவ்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியுமா என்பது ஆராயப்படுகிறது.
அந்தத் தொழில்நுட்பம் நம்பகமானது என்றும் செலவைக் குறைக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டால் சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள கடல்நீரை நல்ல நீராக்கும் ஆலைகளில் பயன்படுத்தலாம் என்று பியுபி தெரிவித்துள்ளது.
முதன்மை நீர் சுத்திகரிப்புச் செயல்முறைக்குமுன், அசுத்தங்களான அழுக்கு, பாசி, எண்ணெய் போன்றவற்றை அகற்ற வேண்டும். இல்லையெனில், அவை பின்னாளில் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சவ்வுகளை அடைத்துவிடும் அல்லது பாழாக்கிவிடும்.
தற்போது, அந்தச் சுத்திகரிப்பு செயல்முறை மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது. சோதனை செய்யப்படும் புதிய அமைப்பு, பீங்கான் சவ்வுகளைப் பயன்படுத்தி அவற்றை ஒரே, சிறிய அமைப்பாக ஒருங்கிணைக்க முயல்கிறது.
“இந்தத் தொழில்நுட்பம் கடல்நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான ஆற்றலில் 50 விழுக்காட்டைச் சேமிக்க உதவும்” என்று பியுபியின் தலைமைப் பொறியியல், தொழில்நுட்ப அதிகாரி டாக்டர் குர்தேவ் சிங் கூறினார்.
“இது நாம் இன்று உற்பத்தி செய்யும் அதே உயர் தரத்திலான தண்ணீரை, குறைந்த ஆற்றல், குறுகிய இடப்பரப்பில் உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது,” என்றார் அவர்.
அந்தச் சிறிய அமைப்பு, கடல்நீர் சுத்திகரிப்புக்குத் தேவைப்படும் இடத்தையும் குறைக்கக்கூடும்.
அந்தச் சோதனை பியுபி, மேய்டன் சிங்கப்பூர், சிங்கப்பூர் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த முயற்சி.
துவாசில் உள்ள பெரிய அளவிலான மாதிரி ஆலை, ஜூன் மாதத்தில் சோதனைகளைத் தொடங்கியது. அதன் நிலைத்தன்மை, ஆற்றல், சேமிப்பு திறனை மதிப்பிடுவதற்குக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு அது செயல்படும்.
அதில் மொத்தம் 24,000 பீங்கான் சவ்வுத் தகடுகள் உள்ளன. மேலும், அடுத்தகட்ட சுத்திகரிப்பு செயல்முறைகளுக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் கேலன் வடிகட்டப்பட்ட நீரை அதனால் உற்பத்தி செய்ய முடியும்.


