தங்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்போரைத் தேடும் அதேவேளை மனநல ஆலோசகரை நேரில் சென்று நாடத் தயங்கும் இளையர்களுக்குப் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேட் சர்க்கல்ஸ்
‘சேட் சர்க்கல்ஸ்’ (Chat Circles) என்றழைக்கப்படும் திட்டத்தின் மூலம் இளையர்கள் ஒரு மணிநேரத்துக்குப் பயிற்சி பெற்ற தொண்டூழியருடன் தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசலாம். அவரவருக்கு ஏற்ற தொண்டூழியரை சேட் சர்க்கல்ஸ் இணைத்துத்தரும்.
‘எம்பேக்ட்’ எனும் சமூக அமைப்பு, புதன்கிழமை (ஆகஸ்ட் 26) இத்திட்டத்தைத் தொடங்கியது. இதில் மருத்துவரீதியான சோதனைகள், சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாத அறிவுரை போன்றவை இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் அமர்விலும் 20 இளையர்கள் வரை பங்கேற்கலாம். இந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை சேட் சர்க்கல்ஸ் மாதந்தோறும் நடத்தப்படும்.
கல்வி நிலைய வளாகங்களில் அமர்வுகளை நடத்த உயர்கல்வி நிலையங்களுடனும் வசதி குறைந்த இளையர்களுக்குச் சேவையாற்றும் நன்கொடை அமைப்புகள் போன்ற சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து செயல்பட எம்பேக்ட் திட்டமிட்டுள்ளது.
எஸ்ஜி இளையர் திட்டத்தின் அங்கம்
ஐந்தாண்டு எஸ்ஜி இளையர் திட்டத்தின்கீழ் (SG Youth Plan) வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்நோக்கும் இளையர்களுக்கு ஆதரவளிக்கும் புதிய மனநல, மீள்திறன் திட்டங்களில் சேட் சர்க்கல்ஸ் அங்கம் வகிக்கிறது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் தேசிய இளையர் மன்றமும் சேர்ந்து எஸ்ஜி இளையர் திட்டத்தைத் தொடங்கின.
திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான், இளையர்கள் பலர் வாழ்க்கை உருமாறும்போது தாங்கள் எடுக்கும் முடிவுகள் குறித்து சந்தேகம் கொள்வதாகச் சுட்டினார். நிலையற்றிருக்கும் உலகச் சூழலில், இளையர்களிடையே நம்பிக்கையையும் மீள்திறனையும் வளர்க்க அமைச்சு எண்ணம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சேட் சர்க்கல்ஸ் அதுபோன்ற ஒரு திட்டம் என்று கூறிய அவர், அது இளையர்களின் பிரச்சினைகள் காது கொடுத்துக் கேட்கப்படுவதையும் அவர்களுக்கு ஆதரவிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஒன்று என்றார்.
“நமது இளையர்கள் எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் அகற்ற முடியாது. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதேவேளை, அவர்கள் தாங்களாக மட்டும் பிரச்சினைகளைச் சமாளிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்,” என்று அவர் விவரித்தார்.


