நகர, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான புத்தாக்க, அனைத்துலகத் தீர்வுகளை ஆதரிக்கும் புதிய திட்டத்தைச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் புத்தாக்க, தொழில்முனைப்புக் கழகம் (எஸ்எம்யு ஐஐஇ) தொடங்கியுள்ளது.
‘நகர சஸ்டெய்னொவேட்டர்’ (Urban SustaInnovator) எனும் அத்திட்டம், தலைசிறந்த புதிய தொழில்நிறுவனங்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்து, ஆசியாவில் அவை விரிவடைய தளம் அமைத்துத் தரும்.
எஸ்எம்யு ஏற்பாட்டில் இடம்பெறும் 12வது லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டியின் இறுதிச் சுற்று வாரத்தின் முதல் நாளில் (செப்டம்பர் 29) தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இப்புதிய முயற்சியைத் தொடங்கிவைத்தார்.
இந்த 12 மாதத் திட்டத்திற்கு அனைத்துலகத் தொழில்முனைவர்கள் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின்போது சிங்கப்பூரிலேயே தங்கவேண்டிய அவசியமில்லை; எந்தக் கட்டணமும் இல்லை.
புதிய திட்டத்தின் பின்னணியில் ஏ ஸ்டார், ஏன்ட்லர், எஸ்டி இஞ்சினியரிங் போன்ற தனியார், பொதுத் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. ஒவ்வொரு தொழில்நிறுவனத்திற்கும் அக்கூட்டமைப்பிலிருந்து ஒருவர் தலைமை வழிகாட்டியாக உதவுவார். எஸ்எம்யுவின் வெளிநாட்டு நிலையங்கள், நிகழ்ச்சிகள்மூலம் தொழில்முனைவர்கள் புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
“முன்னோடித் திட்டங்கள், பாதுகாப்பான வரையறைகளில் நம் தொழில்முனைவர்கள் சோதனைகளை மேற்கொள்ள நாம் உதவலாம். கட்டடத்துறை, பசுமை எரிசக்தி, நிதித் தொழில்நுட்பம், சுகாதாரப் புத்தாக்கம் எனப் பல துறைகளிலும் சிங்கப்பூர் இந்த உத்தியை மேற்கொண்டுள்ளது.
“அப்புத்தாக்கங்கள் வெற்றிகரமானவையென நிரூபிக்கப்பட்டதும் அவற்றை மேலும் பெரிதாக விரிவுபடுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டடத் துறையில் புத்தாக்கத் தீர்வுகளை விரைவுபடுத்த நம் அமைப்புகள் கட்டடப் புத்தாக்கக் குழுவை அமைத்துள்ளன,” என்றார் அமைச்சர் சீ.
“இத்திட்டத்தின்மூலம் நிறுவனங்களைச் சிங்கப்பூர் வழியாக ஆசியாவுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்,” என்றார் எஸ்எம்யு பங்காளித்துவப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் லிம் சான் சான்.
தொடர்புடைய செய்திகள்
திட்டத்துக்கு விண்ணப்பிக்க https://iie.smu.edu.sg/usi எனும் இணையத்தளத்தை நாடலாம்.
“நீங்கள் சிங்கப்பூரில் பிறக்காவிட்டாலும், நல்ல யோசனை வைத்திருந்தால், உங்களால் நல்ல பங்களிப்பை அளிக்கமுடிந்தால், சிங்கப்பூர்க் குடும்பத்தில் நீங்கள் இணைய விரும்பினால் நாங்கள் உங்களை வரவேற்கிறோம் - படிப்புக்காகவோ வேலைக்காகவோ, எதிர்காலத்தில் நிரந்தரவாசி அல்லது சிங்கப்பூரர் ஆவதற்காகவோ. சிங்கப்பூர் தொடர்ந்து திறந்த, இணைப்புமிக்க, வரவேற்கும் நாடாக இருந்தால்தான் நாம் வெற்றிகரமான புத்தாக்க மையமாக இருக்க முடியும்,” என்றார் அமைச்சர் சீ.
12வது லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டி
கடந்த 25 ஆண்டுகளாக, ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் லீ குவான் யூ அனைத்துலக வர்த்தகத் திட்டப் போட்டி, இவ்வாண்டு இதுவரை காணாத அளவில் 91 நாடுகளிலிருந்து 1,572 விண்ணப்பங்களை ஈர்த்தது. அவற்றிலிருந்து 60 நிறுவனங்கள் சிங்கப்பூரில் நடைபெறும் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டன.
அவை S$2.5 மில்லியன் மதிப்பிலான ரொக்கம், ஆதரவு, வழிகாட்டுதலுக்காகப் போட்டியிடுகின்றன. மாபெரும் இறுதிச் சுற்று அக்டோபர் 2ஆம் தேதி முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டின் முன்னிலையில் நடைபெறும்.
மேல்விவரங்களுக்கு https://lkygbpc.smu.edu.sg/ இணையத்தளத்தை நாடலாம்.
தொழில்முனைப்புகளை மதிப்பிட முதலீட்டாளர்களுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளுக்கான அனைத்துலகப் போட்டியையும் (டியுஏஐ) எஸ்எம்யு இதற்குமுன் ஏற்பாடுசெய்திருந்தது. அதன் வெற்றியாளர்கள் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டனர். சிங்கப்பூரைச் சார்ந்த ‘பஃபர் ஏஐ’ (Puffer AI), கனடாவைச் சார்ந்த ‘இவெலைஸ்’ (Evalyze), இந்தியாவைச் சார்ந்த ’ஷென்சு ஏஐ’ (Shensu AI) ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.