மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் இளையர்களுக்குக் கூடுதல் உதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், மனநலப் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறிகளை அடையாளம் கண்டு நிலைமை மோசமடைவதற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க பள்ளி மனநல ஆலோசர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலம் வரை பதின்ம வயதினரிடையே மனநலப் பிரச்சினைகள் அதிக அறிகுறிகளின்றி மோசமடைந்ததாக கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவர் ஏஞ்சலினா ஆங் தெரிவித்தார்.
நேற்று (ஜூன் 20) அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்ட புதிய மனநல உதவித் திட்டத்துக்கு அவர் தலைமை தாங்குகிறார்.
2021ஆம் ஆண்டு, உயிரை மாய்த்துக்கொள்ள அல்லது தங்களைக் காயப்படுத்திக்கொள்ள முயன்றதற்காகத் தங்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 10லிருந்து 19 வயதுக்குட்பட்ட நோயாளிகளை கேகே மருத்துவமனை ஆராய்ந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளில், அத்தகைய நோயாளிகள் உயிரை மாய்த்துக்கொள்வதற்கோ தங்களைக் காயப்படுத்திக்கொள்வதற்கோ முன்பு ஓராண்டு காலத்துக்குள் தலைவலி, வயிற்றுவலி போன்ற காரணம் தெரியாத உடல்நலப் பிரச்சினைகளுக்கென மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்களை நாடியது தெரியவந்தது.
“மருத்துவ ரீதியாகக் காரணம் இல்லாமல் இருக்கும் உடல்நலப் பிரச்சினைகள் (மனநலப் பிரச்சினைகளுக்கான) அறிகுறிகளாக இருக்கலாம்.
“மனவேதனை, மனப்பதற்றமாக இருக்கலாம், துன்புறுத்தலுக்குக்கூட அவர்கள் ஆளாகியிருக்கலாம். இதுபோன்ற பிரச்சினைகளைத் தொடர்ந்து கவனிக்காமல்விட்டால் அவை பாதிக்கப்பட்ட பிள்ளையை விழுங்கிவிடும்,” என்று டாக்டர் ஆங் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் மனஅழுத்தத்துக்கு ஆளாகும் ஒரு பிள்ளைக்கு சிகிச்சையளிக்க சராசரியாக 10,250 வெள்ளி செலவாகிறது என்று டாக்டர் ஆங், டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியும் மனநலக் கழகமும் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையை மேற்கொள்காட்டிச் சொன்னார்.
இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில் கேகே மருத்துவமனை, ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உளவியலாளர்கள் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இதன்கீழ் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 300க்கும் அதிகமான பள்ளி மனநல ஆலோசகர்களுக்கும் சமூக மனநல நிபுணர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கேகே மருத்துவமனை, தெமாசெக் அறநிறுவனம் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
தெமாசெக்கின் இளையர் தொடர்புத் திட்டத்தின்கீழ் (Youth Connect Programme) இடம்பெறும் இம்முயற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், “இன்றைய தொடக்க நிகழ்ச்சி மனநல ஆதரவுக்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதை மட்டும் குறிக்காது.
“நாம் சந்திக்கும் இளையர்களுக்கு அவரவருக்கு ஏற்ற ஆகச் சிறந்த முறையில் ஆதரவு வழங்க, நாம் எந்தத் துறையைச் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற நமது ஒட்டுமொத்த கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது,” என்றார்.

