ஆயர் ராஜாவில் உள்ள லாஞ்ச்பேட்@ஒன்நார்த் (LaunchPad @ one-north) வளாகத்துக்கான பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களை ஜேடிசி கழகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அத்திட்டம் அமையும் என்று ‘மீட்டிங் பாயின்ட்’ எனப்படும் புதிய வளாகத்தின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு வர்த்தக, தொழில் மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் புதன்கிழமை (மார்ச் 25) தெரிவித்தார்.
கூட்டுறவுத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், முதலீட்டாளர்கள் சந்தித்துக்கொள்ளவும், சமூக நிகழ்வுகளுக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.
வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளின்படி, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) இரண்டு மாதங்கள் வரை வாடகையில்லா சலுகையுடன் நீக்குப்போக்கான வாடகை ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
ஜேடிசி கழகத்தின் மற்ற வளாகங்களில் உள்ள வசதிகளைப் புதிய வர்த்தகங்கள் பயன்படுத்திக்கொள்ளவும் இணை ஆய்வுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படும். அதன்வழி புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னெடுப்புகள் வளரும்.
அதன்வழியாக ஆரம்பக்கட்ட நிலையில் உள்ள நிறுவனங்கள், பெருநிறுவனங்களுடன் ஒரே வளாகத்தில் இணைந்து செயலாற்றி விரிவடைய வாய்ப்புள்ளது.
“செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுடன் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றவும் இங்கேயே தங்கி வாழ்வியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த புதிய வளாகம் வழியமைக்கும். பயனுள்ள உண்மையான தொடர்புகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்க நாங்கள் எடுத்துள்ள முதல் முயற்சி இது,” என்று அமைச்சர் ஆல்வின் டான் தமது உரையில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வளாகத்தில் விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உணவகங்களும் அமைக்கப்படவுள்ளன.
திறப்புவிழாவில் இன்சியட் என்ற வர்த்தகப் பள்ளி, சிங்கப்பூர் தேசியப் பல்கழைக்கழகம், தொழில்முனைவோருக்கான செயல்பாட்டுச் சமூகம் ஆகிய அமைப்புகளுடன் ஜேடிசி கழகம் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.

