வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகள் விலையேற்றத்தை் தணிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து வீவக கடன் வரம்பு குறைக்கப்படுகிறது.
வீடு வாங்க வீவக கடனைப் பயன்படுத்துபவர்களுக்கு வீட்டின் விலையில் அல்லது சொத்தின் மதிப்பில் அதிகபட்சம் 80 விழுக்காடு கடன் வழங்கப்பட்டது
இனி வீட்டின் விலையில் அல்லது சொத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75 விழுக்காடு கடனை மட்டுமே பெற முடியும்.
வீடு வாங்குவோருக்கு வங்கிகளும் வீட்டின் விலையில் அல்லது சொத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75 விழுக்காடு கடன் வழங்குகின்றன.
முதல்முறையாக வீவக வீடு வாங்கும் குறைந்த, நடுத்தர வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கான மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம் $80,000லிருந்து $120,000ஆக உயர்த்தப்படுகிறது.
ஒற்றையருக்கான மானியம் $40,000லிருந்து $60,000ஆக ஏற்றம் காண்கிறது.
தொடர்புடைய செய்திகள்
வீட்டுக் கடனை வாங்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிடக்கூடாது என்பதற்காகவும் வீவக கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வீவக கடன் வரம்பு குறைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சர் லீ விளக்கமளித்தார்.
கடன் வரம்பு அதிகமாக இருக்கும்போது வீடு வாங்குவோர் பெரிய வீடுகளை வாங்கி கூடுதலாகச் செலவு செய்வதை அதிகாரிகள் கவனித்தாக அவர் கூறினார்.
இதன் விளைவாக வீவக மறுவிற்பனை வீடுகள் விலையேற்றத்துக்கு அவர்கள் பங்களிப்பதாக அமைச்சர் லீ தெரிவித்தார்.
வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அதிகமாக இருப்பதாகவும் இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் திரு லீ கூறினார்.
இருப்பினும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் விற்கப்பட்ட வீவக வீடுகளில் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக விற்கப்பட்ட வீவக வீடுகளின் விகிதம் 2 விழுக்காடு மட்டுமே என்று அமைச்சர் லீ தெரிவித்தார்.
“வீவக மறுவிற்பனை வீடுகள் கட்டுப்படியான விலையில் இருக்குமா என்ற கவலை சிங்கப்பூரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கவனமாக இருக்காவிடில், வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை அளவுக்கு அதிகமாகிவிடக்கூடும்,” என்றார் அமைச்சர் லீ.
வீவக கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதால் வீடு வாங்குவோர் பாதிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் லீ, வீவக கடன் பெறுபவர்களில் பெரும்பாலானோர் பாதிப்படையமாட்டார்கள் என்று கூறினார்.
வீவக கடனைப் பயன்படுத்துபவர்களில் பத்தில் கிட்டத்தட்ட ஒன்பது பேர் தங்கள் வீட்டின் விலையில் 75 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவான தொகையைக் கடன் வாங்கியுள்ளதை அவர் சுட்டினார்.
வீவக கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்க மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானிய அதிகரிப்பு கைகொடுக்கும் என்று அமைச்சர் லீ கூறினார்.
மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானிய அதிகரிப்பால் ஒவ்வோர் ஆண்டும், 13,000க்கும் அதிகமான குடும்பங்கள் அல்லது முதல்முறையாக வீடு வாங்குவோரில் 85 விழுக்காட்டினர் பலன் அடைவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு லீ தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீடமைப்பு மானியம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு இது பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு ஆக அதிகமான ஆதரவு வழங்கப்படும் என்று அமைச்சர் லீ கூறினார்.

