புதிய சாதனை: வீவக ஐந்தறை வீடு $1.73 மில்லியனுக்கு விற்பனை

புதிய சாதனை: வீவக ஐந்தறை வீடு $1.73 மில்லியனுக்கு விற்பனை

2 mins read
a70adeff-5e7a-4d4a-ab84-0a708ee0225c
ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள ஒரு ஐந்தறை வீவக வீடு சாதனை அளவாக $1.73 மில்லியனுக்கு விற்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீவக வீடு ஒன்று 1.728 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையாகியிருக்கிறது.

96ஏ ஆண்டர்சன் ரோட்டில் உள்ள அந்த ஐந்தறை வீடு கடந்த ஏப்ரல் மாதம் விற்கப்பட்டது.

வீவக வீட்டு விற்பனையில் இது ஒரு புதிய சாதனை என்று எட்ஜ்பிராப் தகவல் தெரிவிக்கிறது.

அந்த வீடு 113 சதுர மீட்டர் (1,216 சதுர அடி) பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதன்படி, ஒரு சதுர மீட்டருக்கு $1,421 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய சாதனையாக 92 டாவ்சன் ரோட்டில் உள்ள ஐந்தறை வீடு கடந்த பிப்ரவரியில் 1.7 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டது. அதாவது, அதன் ஒரு சதுர மீட்டரின் விலை $1,295.

சிட்டி வியூ@ஹெண்டர்சன் பேட்டையின் ஒரு பகுதியான அந்த ஐந்தறை வீடு புளோக்கின் உச்சத்தில் 46வது மாடிக்கும் 48வது மாடிக்கும் இடையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் உயர்மாடியில் உள்ள வீடுகளிலிருந்து தெற்குக் கடற்கரைப் பகுதியையும் சிங்கப்பூர் ராட்டினத்தையும் மத்திய வர்த்தக வட்டாத்தையும் தடையின்றி பார்க்க முடிவதாகக் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அது, 92 ஆண்டுகள், ஒரு மாதகால நீண்ட குத்தகைக் காலத்தைக் கொண்டிருக்கிறது.

மேலும் அந்த வீடு வசதியான இடத்தில் அமைந்துள்ளதால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நகர மையத்திற்கு அருகே ரெட்ஹில், தியோங் பாரு நிலையங்களுக்கு நடுவில் வீடு அமைந்துள்ளது. இரண்டு நிலையங்களும் பத்து நிமிட நடை தொலைவில் இருக்கின்றன.

வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் பல பாலர், தொடக்கப் பள்ளிகளும் உணவங்காடி நிலையங்களும் ஹெண்டர்சன் சமூக மன்றமும் இடம்பெற்றுள்ளன என்று மதர்ஷிப் தெரிவிக்கிறது.

கடந்த 2022ல் ஹெண்டர்சன் ரோட்டில் இதே புளோக்கின் 41வது மாடியில் இருந்த மற்றொரு ஐந்தறை வீடு 1.4 மில்லியன் வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்