தியோங் பாருவில் புதிய மறுசுழற்சி இயக்கம்; காலி போத்தல்களுடன் வந்த சிறுவன்

தியோங் பாருவில் புதிய மறுசுழற்சி இயக்கம்; காலி போத்தல்களுடன் வந்த சிறுவன்

2 mins read
7f2d0982-a231-449d-9c56-2f48173c5820
காலி போத்தல்களை பொம்மை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்த மூன்று வயது சிறுவன் ஈத்தன் பெய். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தியோங் பாருவில் பொறுப்பான மறுசுழற்சியை ஊக்குவிக்கும் முதல் முன்னோடித் திட்டம் சனிக்கிழமை (ஏப்ரல் 11) குடியிருப்பாளர்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்டது.

இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்று மறுசுழற்சிக்கான பொருள்களை உரிய இடத்தில் சேர்த்தனர். சிறுவன் ஒருவன், சிறிய பொம்மை வண்டியில் காலிப் புட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

தியோங் பாரு சமூக நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறுசுழற்சிப் பொருள்களைப் போட வந்தவர்களில் ஆக இளையவர் அந்த மூன்று வயது ஈத்தன் பெய்.

‘லவ் தியோங் பாரு’ என இயக்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது. இது, தியோங் பாருவின் செங் போ குடியிருப்பாளர்கள் முன்னெடுத்துள்ள புதிய முயற்சியாகும். அவ்வட்டாரத்தில் நீலநிறத் தொட்டிகள் குப்பைகளால் நிரம்பி வழிந்த காட்சி முகம் சுளிக்க வைத்ததால் புதிய இயக்கத்தை அவர்கள் தொடங்கினர்.

இம்முயற்சியின்கீழ் ஏப்ரல் 11 முதல் ஜூன் 20 வரை நீலநிறத் தொட்டிகள் அகற்றப்படும். மேலும், சமூக நிலையத்தில் மாதம் இருமுறை நடைபெறும் இயக்கத்தின்போது மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டுவந்து போடலாம்.

குறிப்பிட்ட சனிக்கிழமைகளில் காலை 10 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை மறுசுழற்சி இயக்கம் நடைபெறும். காகிதம், நெகிழி, உலோகம், கண்ணாடி ஆகிய பிரிவுகளின்கீழ் பொருள்களைப் பிரிக்க மக்களுக்குத் தொண்டூழியர்கள் வழிகாட்டுவார்கள்.

ஏப்ரல் 11ஆம் தேதியன்று தியோங் பாரு குடியிருப்பாளர்கள் பை, பெட்டி நிறைய மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டுவந்தனர்.

நாள் முடிவில் 125 கிலோ செய்தித்தாள்கள், 40 கிலோ கண்ணாடி, 35 கிலோ நெகிழி உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன.

ஈத்தனின் தாயாரான திருவாட்டி ஜேசிலின் பெய், 40, தாமும் தம் கணவரும் தங்கள் மகனுக்கு மறுசுழற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி கற்றுத் தர விரும்பியதாகக் கூறினார்.

“இதற்கு முன்பு வீட்டுக்கு அருகே உள்ள நீலநிறத் தொட்டியில் மறுசுழற்சிப் பொருள்களைப் போட அவரை அழைத்து வந்தோம். ஆனால் சிலர் அங்கு எல்லாவித குப்பைகளையும் கொட்டுவதைப் பார்த்து வருத்தமடைந்தேன்,” என்று இல்லத்தரசியான திருவாட்டி ஜேசிலின் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்