சிங்கப்பூரில் இயங்கும் மறுசுழற்சி நிறுவனமான ரிடக்ஸ், புதிய தானியக்க சூரியசக்தி தகடு நிலையத்தைத் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் சூரியசக்தி தகட்டுக் கழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் பழைய சூரியசக்தி தகடுகள் பயனில்லாமல் போய்விடும்.
அப்படியிருக்கையில், புதிய மறுசுழற்சி ஆலை திங்கட்கிழமை (நவம்பர் 24) தொடங்கப்பட்டது.
இந்த மறுசுழற்சி ஆலை துவாசில் அமைந்துள்ளது. ஒரு சூரியசக்தி தகட்டுக் கழிவில் 96 விழுக்காடு வரையிலான பகுதியை மீட்டு, மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவது இந்த ஆலையின் இலக்காகும்.
தற்போது சூரியசக்தி தகட்டுக் கழிவு, குப்பை சேகரிக்கப்படும் இடத்திற்கு (landfill) அனுப்பப்படுகிறது. அவ்வாறு செய்வதற்குப் பதிலாக இக்கழிவை முடிந்தவரை மறுசுழற்சி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம் 1,400 டன் வரையிலான கரிம வெளியீட்டைக் குறைக்க முடியும்.
அதிநவீன தொழில்நுட்ப முறைகளைக் கொண்ட இந்த ஆலையில் மணிக்கு 18 சூரியசக்தி தகடுகளைக் கையாள முடியும். இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு 36,000ஆக இருக்கும்.
இது, சிங்கப்பூரில் தற்போது சேரும் சூரியசக்தி தகட்டுக் கழிவில் சுமார் 27 விழுக்காடு என்று ரிடக்ஸ் நிறுவனரும் அதன் வர்த்தக மேம்பாட்டு இயக்குநருமான ஜெஃப் சியா தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் செயல்பாட்டிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும் சுரியசக்தித் தகடுகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் பதிவான 134,305ல் இருந்து 2030ல் 157,087ஆக அதிகரிக்கும் என்று ரிடக்ஸ் கூறுகிறது. பழைய தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்திய, தொடக்கத்தில் பொருத்தப்பட்ட சூரியசக்தித் தகடுகள் கடந்த ஆண்டுகளில் செயலிழந்து வந்ததால் அவை இப்போது செயல்பாட்டிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவது இதற்குக் காரணம் என்று திரு சியா குறிப்பிட்டார்.
சூரியசக்தித் தகடுகள் செயல்பாட்டிலிருந்து மீட்டுக்கொள்ளப்படும்போது அவை கழற்றப்பட்டு அகற்றப்படும். சூரியசக்தி தகடுகள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செயல்படும்.
“அவற்றுக்கு நாம் தீர்வுகாணாவிட்டால் அவை குப்பை சேகரிக்கப்படும் இடத்துக்குத்தான் அனுப்பப்படும்,” என்றார் திரு சியா.
இந்த சூரியசக்தி தகடு மறுசுழற்சித் திட்டம், ரிடக்ஸ், புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப நிறுவனமான எட்டாவோல்ட், பசுமை நிர்வாகத் தீர்வுகளை வழங்கும் வெக்டர் கிரீன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
சூரியசக்தி தகடுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்ப முறையை எட்டாவோல்ட் உருவாக்கியுள்ளது. அவற்றைச் செயல்பாட்டிலிருந்து மீட்கும் பணிகளை வெக்டர் கிரீன் கையாள்கிறது.
புதிய ஆலையின் திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங், “நிலப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சிங்கப்பூருக்கு, அதிக சூரியசக்தி கழிவை செமாக்காவ் குப்பை சேகரிப்புப் பகுதிக்கு அனுப்புவது நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நடவடிக்கையாகாது,” என்றார். அப்படியிருக்கையில், தீவு முழுவதும் நீடித்த நிலைத்தன்மை அம்சத்துடன் சூரியசக்தி தகடுகளைப் பொருத்துவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர், சிங்கப்பூர் தனது மக்கள்தொகை, பருவநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று விவரித்தார்.

