விஇபி எனப்படும் வாகன நுழைவு அனுமதி (விஇபி) பெறாத சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டு வாகனங்களின் ஓட்டுநர்கள், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்தும் வரை மலேசியாவில் இருந்து வெளியேற இயலாது.
இந்தப் புதிய கட்டுப்பாடு நவம்பர் 15ஆம் தேதி முதல் நடப்புக்கு வரும் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் விஇபி பெறாத தனியார் வாகனங்களுக்கு எதிராக மட்டும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
இனி, நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எதிராகவும் அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாலைப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குநர் ஏய்டி ஃபாட்லி ராம்லி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் ஊடகங்களிடம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) மாலை பேசியபோது இந்தப் புதிய நடைமுறை குறித்து அவர் அறிவித்தார்.
விஇபி வைத்திராத, காலாவதியான விஇபி வைத்துள்ள, விஇபிக்குப் பதிவு செய்து இன்னும் அதனைப் பெறாத வாகனங்களுக்கு எதிராக இனிமேல் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் புதிய நடைமுறைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“அமலாக்க நடவடிக்கைகள் இதற்கு முன்பு வரை ஜோகூரில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது அது நாடு முழுவதிலும் விரிவாக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“விஇபி பெறாத சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியாவின் எந்த ஓர் இடத்தில் பிடிபட்டாலும் அவற்றுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று திரு ஏய்டி கூறியதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
அபராதம் விதிக்கப்படும் ஓட்டுநர்கள் உடனடியாக அந்த அபராதத் தொகையைச் செலுத்துவதோடு, விஇபிக்கான பதிவை நிறைவு செய்தால் மட்டுமே மலேசியாவில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசிய-சிங்கப்பூர் எல்லையில் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றார் திரு ஏய்டி தெரிவித்துள்ளார்.
விஇபி இன்றி மலேசியாவுக்குள் நுழைந்த 3,910 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அண்மையில் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 1.173 மில்லியன் ரிங்கிட் ($360,000) என மலேசிய ஊடகங்கள் கூறியிருந்தன.

