விமானப் பயணிகள் இரண்டு மின்தேக்கிகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம்

விமானப் பயணிகள் இரண்டு மின்தேக்கிகளை மட்டுமே எடுத்துச் செல்லலாம்

2 mins read
ஏப்ரல் 15ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமுலுக்கு வரும்
f6adc1e9-eefc-4a55-94d9-4d194424a9b3
விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகக் கூடுதல் மின்தேக்கிகளை அப்புறப்படுத்த வேண்டும் - படம்: ஐஸ்டாக்
Google News Preferred Icon

சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் பயணம் செய்பவர்களுக்கு மின்தேக்கிகள் (Power Banks) தொடர்பாகப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) புதிய விதிமுறைகளின்படி, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் பயணிகள் தங்களது கைப்பையில்அதிகபட்சம் இரண்டு மின்தேக்கிகளை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

புதிய விதிமுறைகளின் விவரம்

மணிக்கு 100 வாட் வரை திறன் கொண்ட மின்தேக்கிகள், 100 வாட் முதல் 160 வாட் வரை திறன் கொண்ட (முன் அனுமதி தேவைப்படும்) மின்தேக்கிகள் என, அனைவருக்கும் அதிகபட்சமாக இந்த இரண்டு என்ற எண்ணிக்கைக் கட்டுப்பாடு பொருந்தும்.

சிங்கப்பூர் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) திங்கட்கிழமை (ஏப்ரல் 6) வெளியிட்ட அறிக்கையில், இரண்டுக்கும் மேற்பட்ட மின்தேக்கிகள் வைத்திருக்கும் பயணிகள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகக் கூடுதல் மின்தேக்கிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்கள்:

மின்தேக்கிகளில் உள்ள லித்தியம் மின்கலங்கள் அதிக வெப்பமடைந்தாலோ அல்லது மின்கசிவு (Short circuit) ஏற்பட்டாலோ தீ விபத்து நேரும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டே ஐசிஓஏ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும், பயணிகள் விமானப் பயணத்தின்போது மின்தேக்கிகளை மின்னூட்டம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 1 முதலே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் நிறுவனங்கள் இத்தகைய தடையை அமல்படுத்தியுள்ளன.

விழிப்புணர்வு நடவடிக்கைகள்

தற்போது நடைமுறையிலுள்ள விதிகளின்படி, 100 வாட் திறன் கொண்ட 20 மின்தேக்கிகள் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், இனி அது இரண்டாகக் குறைக்கப்படுகிறது.

இது குறித்த தகவல்கள் சாங்கி விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்படும். பயணிகள் தங்களது விமான நிறுவனங்களிடம் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்துக் கேட்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றங்களைச் சீராக அமல்படுத்த விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக சிஏஏஎஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
விமானம்மின்னூட்டிதடைபயண சேவைசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ஸ்கூட்