சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த சுகாதார ஒழுங்குமுறை அமைப்பாக சுகாதார, அறிவியல் ஆணையம் (எச்எஸ்ஏ) வலுப்படுத்தப்படுகிறது.
இதையடுத்து நோயாளிகளைப் பாதுகாக்கவும் சுகாதாரத் துறைக்கும் அத்துறையைச் சேர்ந்த நிபுணர்களுக்கும் தெளிவை வழங்கும் ஓர் அமைப்பு உருவாக்கப்படும்.
இது, சுகாதாரத் துறை புத்தாக்கங்களை உரிய நேரத்தில் பெறுவதையும் சாத்தியமாக்கும்.
சுகாதாரத் துறையில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் இது பயனளிக்கும் என்று சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதார அறிவியல் ஆணையம் (திருத்தம்), பிற விவகாரங்கள் தொடர்பான மசோதா புதன்கிழமை (செப்டம்பர் 9) நிறைவேற்றப்பட்டது.
இது, ஆணையத்தின் கீழ் சுகாதார ஒழுங்குமுறை செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வழிவகை செய்கிறது.
“இந்த ஒழுங்குமுறை ஆற்றல்களையும் நிபுணத்துவத்தையும் நெருக்கமாகக் கொண்டு வருவது சுகாதாரப் பராமரிப்பு துறையில் இன்னும் ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கும்,” என்று மசோதா மீதான விவாதத்தின்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது, இந்த ஒழுங்குமுறை அமைப்பு மூன்று வெவ்வேறு அமைப்புகளில் இடம்பெற்றுள்ளது என்று அவர் விளக்கினார்.
சுகாதாரப் பராமரிப்பு சேவைகள், சுகாதாரத் தகவல், மனித உயிர்மருத்துவ ஆய்வு, உயிரியல் பாதுகாப்பு போன்றவற்றை சுகாதார அமைச்சு ஒழுங்குபடுத்துகிறது.
மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற சுகாதாரப் பொருள்களை சுகாதார அறிவியல் ஆணையம் ஒழுங்குமுறைப்படுத்துகிறது.
மருத்துவர்கள், பல்மருத்துவர்கள் தாதியர்கள், மருந்தாளர்கள், துணை சுகாதார நிபுணர்களுக்கான விதிமுறைகளை மேற்பார்வையிடும் மன்றம் மற்றும் கழகங்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு நிபுணர் கழகங்களின் செயலகம் ஆதரவாகச் செயல்படுகிறது.
இது, வழக்கமான நிறுவன மறுசீரமைப்பு மட்டுமல்ல, நோயாளிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் பயனுள்ள சுகாதாரக் கண்டுபிடிப்புகளை அவர்கள் உடனடியாகப் பெறுவதற்கு ஏற்ப எதிர்காலத்திற்குத் தயாராகும் ஓர் அமைப்பிற்கு அடிக்கல் நாட்டுவதற்கான வாய்ப்பு என்று அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, தாங்கள் வாங்கிய மருந்துகள், தங்களது சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்கள் அல்லது சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குவோர் அல்லது மருத்துவ நிபுணர் தொடர்பான கவலைகளுக்கு பொதுமக்கள் ஒரே இடமாக சுகாதார, அறிவியல் ஆணையத்துடன் (எச்எஸ்ஏ) தொடர்பு கொள்ளலாம்.
மேலும், சுகாதாரத் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இக்காலக்கட்டத்தில், மின்னிலக்க சுகாதாரம், மரபியல் தொகுதியியல், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய பராமரிப்பு முறைகளும் விநோதமான கண்டுபிடிப்புகளும் பல்வேறு ஒழுங்குமுறைத் துறைகளை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது, இருப்பினும் அதன் ஒழுங்குமுறை பல துறைகளை உள்ளடக்கியுள்ளது. சுகாதார அறிவியல் ஆணையத்தின்கீழ் ஓர் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைச் செயல்பாடு, செயற்கை நுண்ணறிவின் நிர்வாகத்தை முழுமையாகக் கருத்தில் கொள்ள அனுமதிக்கும்; செயற்கை நுண்ணறிவு உருவாக்குபவர்கள், சுகாதார நிறுவனங்கள், பயனர்களுக்கு ஒரே தொடர்புப் புள்ளியை வழங்கும்; மேலும், செயற்கை நுண்ணறிவைப் பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் ஏற்றுக்கொள்வதற்குத் தெளிவான, சீரான ஒழுங்குமுறை வழிகாட்டுதலை எளிதாக்கும் என்றும் அமைச்சர் ரஹாயு மேலும் தெரிவித்தார்.

