பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்குப் புதிய மறுவாழ்வுத் திட்டம்

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டோருக்குப் புதிய மறுவாழ்வுத் திட்டம்

2 mins read
da127481-13d1-4482-b103-849a56c63f0d
‘கீப்’ சமூக மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பிசியோதெரப்பிஸ்ட்’ எனப்படும் இயன்முறை சிகிச்சை நிபுணர் மார்கஸ் டான், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட லிம் மூய் ஹுவாங் என்பவருக்கு உதவுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள லிம் மூய் ஹுவாங் என்பவர், தமது உடல் இயக்கத்தைச் சீராக வைத்திருக்க ஜூலை மாதம்முதல் வாரத்திற்கு இரண்டு முறை குழு உடற்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமக்கு அந்நோய் இருப்பதை அவர் கண்டிபிடித்தார். 61 வயதான அவருக்கு, முதுகுப் பிரச்சினை காரணமாக உடலை நிமிர்த்தி நிற்பது சவாலாக இருந்துவருகிறது.

அதனை அவர் தமது அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அறிகுறியாகக் கருதினார்.

உடலை வலிமையாக்கும் பயிற்சிகளையும் சேர்த்து, அந்த உடற்பயிற்சி வகுப்புகளின்போது லிம் தமது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உடல் சார்ந்த உதவிகளையும் பெற்றுள்ளார்.

“காரில் ஏறுவதையும் இறங்குவதையும் மீண்டும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை,” என்று முன்னதாக மூத்த மனிதவள அதிகாரியாகப் பணியாற்றிய லிம் கூறினார்.

இந்நிலையில், பார்கின்சன் நோயுடன் வாழ்பவர்களுக்கு உதவ, $4.48 மில்லியன் மதிப்பிலான மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் ‘கீப்’ எனும் புதிய திட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதைப் பற்றிப் பேசிய அவர், “‘கீப்’ என் நம்பிக்கையைத் திரும்பக் கொண்டுவந்துள்ளது,” என்று கூறினார்.

அந்தத் திட்டம், பார்கின்சன் நோயின் தொடக்க, நடுத்தரக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு முறையான குழு உடற்பயிற்சிகள், தொழில்சார் சிகிச்சை, மனநல ஆதரவு ஆகியவற்றை வழங்குகிறது.

சிங்கப்பூர் பார்கின்சன் சங்கம், ‘என்எச்ஜி ஹெல்த்’தின் டான் டோக் செங் மருத்துவமனை, தேசிய நரம்பியல் கழகம், மற்ற சிங்ஹெல்த் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து லியென் அறநிறுவனம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அத்திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தது.

அதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படும் 2,000 பேரில் லிம்மும் ஒருவர்.

குறிப்புச் சொற்கள்
நோய்பாதிப்புதிட்டம்