செமக்காவ் தீவில் குவிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய திட்டம்

செமக்காவ் தீவில் குவிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய திட்டம்

2 mins read
21fc8d7e-b744-4d0e-bf62-a68f295e6677
கட்டுமானக் கழிவுகளையும் நச்சுப் பொருள்களையும் மறுசுழற்சி செய்து, தொழில்துறைகளுக்குப் பயன்படும் மதிப்புமிக்க பொருள்களாக மாற்றுவதே புதிய தேசிய ஆராய்ச்சி மையத்தின் நோக்கம். - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

சிங்கப்பூரின் ஒரே குப்பை நிரப்பும் இடமான செமக்காவ் தீவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில், அதற்குப் புதிய வாழ்வளிக்கும் நோக்கில் ஒரு புதிய தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

‘டிரெஷர்ஸ்’ எனப்படும் நகர்ப்புறச் சுற்றுப்புறத்துக்கான வளச் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆராய்ச்சி மையத்தைத் தேசியச் சுற்றுப்புற வாரியமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இதனை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமையன்று (ஜூன் 17) அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்டுமானக் கழிவுகளையும் நச்சுப் பொருள்களையும் மறுசுழற்சி செய்து, தொழில்துறைகளுக்குப் பயன்படும் மதிப்புமிக்க பொருள்களாக மாற்றுவதே இந்த மையத்தின் நோக்கமாகும்.

“இதுவரை மிகவும் சவால்மிக்கதாக இருந்துவரும் கழிவுகள் தொடர்பான பிரச்சினையைக் களைய நாம் கொண்டுள்ள நீண்டகாலக் கடப்பாட்டை இந்த ‘டிரெஷர்ஸ்’ திட்டம் எடுத்துக்காட்டுகிறது,” என்று திரு ஜனில் கூறினார்.

சுற்றுப்புறச் சேவைகள் தொடர்பான ‘கேட்டலிஸ்ட் அட் மரினா பே சேண்ட்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அதில் தொழில்துறைத் தலைவர்கள், உலகளாவிய கொள்கை வடிவமைப்பாளர்கள், சுற்றுப்புறம் தொடர்பான பங்குதாரர்கள் எனக் கிட்டத்தட்ட 300 பேர் கலந்துகொண்டனர்.

மற்ற நாடுகள் எதிர்நோக்காத தனித்துவம் வாய்ந்த பிரச்சினையைச் சிங்கப்பூர் எதிர்நோக்குவதாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டட, சுற்றுச்சூழல் பொறியியல் கழகத்தின் தலைவரும் ‘டிரெஷர்ஸ்’ திட்டத்தின் இணை இயக்குநருமான திரு சூ ஜியன் தெரிவித்தார்.

செமக்காவ் தீவு முழுக் கொள்ளளவை எட்டியதும் குப்பை நிரப்ப சிங்கப்பூருக்கு வேறு இடம் இல்லாமல் போய்விடும் என்றார் அவர்.

2035ஆம் ஆண்டிற்குள் முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படும் செமக்காவ் தீவின் ஆயுட்காலம் ‘கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டத்தின்’மூலம் மேலும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். அதற்காக $35 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செமக்காவ் தீவை வெறும் குப்பைமேடாக வைக்காமல் ஒரு தற்காலிகச் சேமிப்பு, மறுசுழற்சி மையமாக மாற்ற வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்