குழந்தைகளுக்கு ஆதரவளிக்க பாலர்பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய வளங்கள்

குழந்தைகளுக்கு ஆதரவளிக்க பாலர்பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய வளங்கள்

2 mins read
02ed3f08-bdee-4406-a741-28ab5f6147e0
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங்கிடம் ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ அமைப்பின் குழந்தைகள் ஆதரவு சேவைகளின் உதவி இயக்குநர் டெனிஸ் பிதியா (வலது) வளத்தொகுப்பு குறித்து விளக்குகிறார். - படம்: சாவ்பாவ்

‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள புதிய வளங்களின் மூலம், வெவ்வேறு கற்றல், வளர்ச்சித் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைச் சமாளிப்பதற்கு, பாலர்பள்ளி ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

‘இன்குலூஷன் டூல்கிட்’ என்றழைக்கப்படும் அந்தப் புதிய வளத்தொகுப்பு வெள்ளிக்கிழமை (மே 22) அறிமுகப்படுத்தப்பட்டது.

நடைமுறை உத்திகள் அடங்கிய கையேடு, மூன்று விதமான விளையாட்டுப் பொருள்கள், காட்சிக் குறிப்பு அட்டைகள் ஆகியவை அந்த வளத்தொகுப்பில் அடங்கும்.

அந்த வளத்தொகுப்பு, ஆசிரியர்களுக்குக் குழந்தைகளின் நடத்தைகளைக் கையாள்வதற்கும் அவர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதற்குத் தேவையான அறிவாற்றலை வழங்கவும் நோக்கம் கொண்டுள்ளது.

அந்தக் கையேட்டில், ஒரு குழந்தை தன் கோபத்தை வெளிக்காட்டுவது முதல், ஓர் இடத்தில் அமராமல் அமைதியின்றி இருப்பது வரை பல்வேறு நடத்தைகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர்கள் தங்களது வகுப்பறையில் குழந்தைகளிடம் கவனிக்கும் நடத்தைகளை, அந்தக் கையேட்டில் உள்ள குறிப்பிட்ட சூழல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

அந்த வளங்கள், ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ அமைப்பின் சொந்தப் பாடத்திட்ட, குழந்தை ஆதரவு நிபுணர்க் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளன. 12 பாலர்பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களின் வகுப்பறை அனுபவங்களைப் பகிர்ந்து அளித்த ஆலோசனைகளும் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

“அந்த வளத்தொகுப்பு, எல்லா நிலையங்களிலும் அனைவரையும் உள்ளடக்கும் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும் அனைவரையும் உள்ளடக்கும் பாலர்பள்ளித் துறைக்கு மேலும் பங்களிப்பதற்குமான விரிவான பயணத்தின் ஒரு பகுதி,” என்று ‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ அமைப்பின் தலைமை நிர்வாகி ஜஸ்டின் ஆங் கூறினார்.

‘என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ மேம்பாட்டு தின நிகழ்ச்சியில் அவர் பேசினார். மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் 7,000க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் ஊழியர்களும் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்