மசெகவின் புதிய முகமான ஃபூவுக்கு புதிய பொறுப்பு

2 mins read
c4417409-f8c3-4238-b491-f3224cd99799
மக்கள் செயல் கட்சியின் புதுமுகம் ஃபூ செசியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மக்கள் செயல் கட்சியின் புதிய முகமான ஃபூ செசியாங், துறைமுக நடத்துநரான பிஎஸ்ஏ சிங்கப்பூர் நிறுவனத்தின் துறைமுக சுற்றுச்சூழல் வளர்ச்சிப் பிரிவுக்கு உதவி தலைவராகச் சேர்ந்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் முன்னாள் இயக்குநரான அவர், லிங்க்டினில் வெளியிட்ட பதிவில் இத்தகலை வெளியிட்டிருந்தார்.

பிஎஸ்ஏயின் விநியோகத் தொடர் மையத்தையும் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான உத்திகளையும் மேம்படுத்தப்போவதாக அவர் சொன்னார்.

இது, இஸ்கந்தர் மேம்பாட்டு வட்டாரம், ஜோகூரில் உள்ள பெங்கெராங் ஆகியவற்றை உள்ளடக்கிய முதலீடு, வர்த்தகத்தை மேம்படுத்துவதாகும்.

இதற்கு முன்பு போக்குவரத்து அமைச்சில் மின்சார வாகனக் கொள்கை உட்பட தனியார், எதிர்கால, நடமாட்டச் சாதனங்களுக்கு அவர் மேற்பார்வையாளராகச் செயல்பட்டார்.

போக்குவரத்து அமைச்சில் தமக்கு மிகவும் பிடித்த துறைகளில் ஒன்றான சிங்கப்பூரை உலகளாவிய விநியோகச் சங்கிலி மையமாக வலுப்படுத்தும் பணியில் இருந்ததாகக் கூறிய நாற்பது வயதான ஃபூ, பிஎஸ்ஏ உட்பட தனியார் துறைகளுடன் நெருக்கமுடன் பணியாற்றியதாகவும் விநியோகச் சங்கிலித் தீர்வுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைக்காக ஒரு கூட்டணியை அமைத்ததாகவும் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூருக்கு வர்த்தகம் இன்றியமையாதது. இதில் துறைமுகமும் அதன் சுற்றுச்சூழல் அமைப்பும் பொருளியல் மற்றும் தேசிய மீள்தன்மைக்கு முக்கிய பங்காற்றுகின்றன,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் 15ஆம் தேதி அவர் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

போக்குவரத்து அமைச்சின் கடைசி நாளான ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு ஏப்ரல் 2ஆம் தேதி அவர் பாசிர் ரிஸ்-பொங்கோல் அடித்தள அமைப்புகளில் இணைந்தார்.

ஏப்ரல் முற்பகுதியில் திரு ஃபூ, புதிய பொங்கோல் குழுத் தொகுதியில் காணப்பட்டார்.

ஏப்ரல் 13 அன்று புதுப்பிக்கப்பட்ட மேற்கூரைத் தோட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

அப்போது, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் பொங்கோல் குடியிருப்புப் பேட்டைகளைப் பார்வையிட்டார்.

பொங்கோல் குழுத் தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று ஃபூவிடம் கேட்டபோது, “அது இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கற்றுக் கொள்வதற்காக கட்சியால் இங்கு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன், என்னால் இயன்ற அளவு சிறந்தவற்றைச் செய்வேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்