18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள்

18 வயதுக்குக்கீழ் உள்ளோரைப் பாதுகாக்க ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகள்

2 mins read
d95fd6a4-17a5-45db-9272-e23ea92996a2
சிங்கப்பூரில்,18 வயதுக்குக்கீழ் உள்ளோர் தகாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்யும்படி தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இதற்குமுன் அறிவித்திருந்தது. - படம்: ஐஸ்டோக்

சிங்கப்பூரில், 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் வெவ்வேறு செயலிகளைத் தங்கள் திறன்பேசிகளில் பதிவிறக்கம் செய்வதைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் அறிமுகம் காணவிருக்கின்றன.

திறன்பேசிகளில் உள்ள ஆப் ஸ்டோர்ஸ் (app stores) கட்டமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு, அரசாங்க அடையாளச் சோதனை ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கும்.

சிங்கப்பூரில், ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் பாலியல் உள்ளடக்கம் போன்ற தகாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்யும்படி தகவல், தொடர்பு மேம்பாட்டு ஆணையம் இதற்குமுன் அறிவித்திருந்தது.

ஆப் ஸ்டோர்ஸ் கட்டமைப்புகள் அரசாங்கம் வழங்கும் அடையாள ஆவணங்களைச் சரிபார்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்வோரின் முக அடையாளத்தையும் இணைய பயன்பாட்டுத் தரவுகளையும் சரிபார்க்க முடியும்.

ஆப்பிள், கூகல், ஹுவாவெய், சாம்சுங், மைக்ரோசாவ்ட் ஆகிய நிறுவனங்களின் ஆப் ஸ்டோர் கட்டமைப்புகளுக்கு அந்தப் புதிய நடைமுறை பொருந்தும்.

கூகல் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வயதை உறுதிசெய்யும் திட்டங்களை முதலில் அறிமுகம் செய்தது. பயனீட்டாளர்கள் கூகலில் எந்த உள்ளடக்கத்தைத் தேடினார்கள், பார்த்தார்கள் போன்றவற்றை நிறுவனம் இன்னும் ஆராய்வதாகச் சொன்னது.

மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறுவனத்தின் பயனீட்டாளர்களின் வயதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று கூகல் நிறுவனம் குறிப்பிட்டது.

கூகல் கணக்கைப் பயன்படுத்தும் 18 வயதுக்குக்கீழ் உள்ளோர் காணொளிகளைப் பார்ப்பதிலிருந்து அவ்வப்போது ஓய்வெடுத்துக்கொள்ளும்படி தகவல் அனுப்ப யூடியூப் தளம் முடிவெடுத்துள்ளது.

பாலியல் ரீதியான, வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களைக் காணாதபடி கூகல் சர்ச் (Google Search) தளம் 18 வயதுக்குக்கீழ் உள்ளோரைத் தடுக்கும்.

18 வயதுக்குக்கீழ் உள்ளோர் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் படங்களை உருவாக்குவதை ஜெமினாய் தளம் தடைசெய்கிறது.

பாதுகாப்பை வலுப்படுத்தி பெற்றோருக்கு ஆதரவளித்து இளம் பயனீட்டாளர்களுக்கு வயதுக்கு ஏற்ற அனுபவத்தைத் தர தொடர்ந்து பலவழிகளை ஆராயவிருப்பதாக கூகல் நிறுவனம் சொன்னது.

இளம் பயனீட்டாளர்களைப் பாதுகாக்க சாம்சுங் நிறுவனமும் புதிய வழிமுறைகளை இம்மாதம் 27ஆம் தேதி அறிமுகம் செய்தது.

சாம்சுங் நிறுவனத்தின் கெலெக்ஸி ஸ்டோரில் வயது வரம்பைச் சரிபார்க்க பயனீட்டாளர்கள் கடன் அட்டைகளின் விவரங்களைப் பதிவுசெய்யவேண்டும்.

பயனீட்டாளரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டப்பின் கெலெக்ஸி ஸ்டோரிலிருந்து வங்கிக் கணக்கு விவரங்களை அவர்கள் அகற்றிவிடலாம். ஏற்கெனவே வங்கி விவரங்களைப் பதிவிட்டிருந்தோர் அதை மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை.

சிங்கப்பூரில் கடன் அட்டைகளை வைத்திருப்பதற்கான வயது வரம்பு 21. எனினும், 18 வயதுக்குக்கீழ் உள்ளோருக்கு பெற்றோரின் கடன் அட்டைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் இணைக் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஹூவாவெய் நிறுவனமும் அதன் ஆப்கெலரியில் கடன் அட்டை விவரங்களைப் பயனீட்டாளர் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்குகிறது. அதன்மூலம் பயனீட்டாளரின் வயதை நிறுவனம் கண்காணிக்கும்.

தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைப் போல சிங்கப்பூரும் வயதுக் கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்