பகுதி மின்கடத்தித் துறையில் $800 மில்லியன் மதிப்பில் புதிய ‘ஆர்ஐஇ’ திட்டம்

பகுதி மின்கடத்தித் துறையில் $800 மில்லியன் மதிப்பில் புதிய ‘ஆர்ஐஇ’ திட்டம்

3 mins read
841ef3e9-2ef9-4f22-8f4c-246f0a7a085c
பகுதி மின்கடத்தித் துறையில் புதிய ஆர்ஐஇ திட்டம் உயர்நிலை உற்பத்தி, புத்தாக்கம் ஆகியவற்றில் நாட்டின் முன்னணி நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பகுதி மின்கடத்தித் துறையில் புதிய ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்புக்கான (ஆர்ஐஇ) திட்டத்தை உருவாக்க சிங்கப்பூர் அரசாங்கம் $800 மில்லியனை முதலீடு செய்யும்.

இது நவீன உற்பத்தி, புத்தாக்கம் ஆகியவற்றில் நாட்டின் முன்னணி நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும்.

இந்தப் புதிய அறிவிப்பை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் டான் சீ லெங், வர்த்தக, தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திங்கட்கிழமை (மார்ச் 2) அறிவித்தார்.

புதிய ஆர்ஐஇ திட்டம், நவீன பொதியாக்கம் (Advanced Packaging), நவீன ஒளித்துகளியல் (Advanced Photonics) போன்ற முக்கியத் தொழில்நுட்பப் பிரிவுகளில் கவனம் செலுத்தும். கணினிச் சில்லுகளின் செயல்திறனை அதிகரிப்பதோடு, மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஆய்வுகளைப் பொருள்களாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஆய்வு, உருவாக்க நடவடிக்கைகளையும் உற்பத்திச் செயல்முறைகளையும் ஊக்குவித்து, சிங்கப்பூரில் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் புத்தாக்கம், நீடித்த நிலைத்தன்மை இலக்குகளை வலுப்படுத்தும் நோக்கிலான வேறு சில முதலீடுகளையும் டாக்டர் டான் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

பகுதி மின்கடத்தி உருவாக்க, புத்தாக்க நிலைய மேம்பாடு

அடுத்த தலைமுறை ஆற்றல் மின்னணுவியல் (power electronics) துறையில் சிங்கப்பூரின் போட்டித்தன்மையை வலுப்படுத்த, $60 மில்லியன் முதலீட்டில் தேசிய பகுதி மின்கடத்தி உருமாற்ற, புத்தாக்க நிலையம் (NSTIC) அமைக்கப்படும். இப்புதிய நிலையம் ஏப்ரல் 2026க்குள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டுக்குள் ‘சிலிக்கான் கார்பைடு’ தொழில்நுட்பங்களின் கடத்துதிறனை இருமடங்காக உயர்த்துவதே இதன் நோக்கமாகும். இது மின்சார வாகனங்களின் பயணத் தொலைவை நீட்டிப்பது போன்ற சிறிய, அதிக ஆற்றல்மிக்க மின்னமைப்புகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். இந்தப் புதிய நிலையத்தின் முயற்சிகள் அனைத்தும் புதிய ‘ஆர்ஐஇ’ பகுதி மின்கடத்தித் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

தனியார் துறைக்கு ஊக்குவிப்பு

‘ஆர்ஐஇ2030’ திட்டத்தின்கீழ் நிறுவனங்களுக்கான ஆய்வு, புத்தாக்கத் திட்டத்தில் அரசாங்கம் $3 பில்லியனுக்குமேல் முதலீடு செய்யும். தனியார் துறையின் கணிசமான ஆய்வு, புத்தாக்க முதலீடுகளை ஈர்ப்பதில் இத்திட்டம் திறம்படச் செயல்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆய்வு, உருவாக்கம், புத்தாக்கத் துறைகளில் 12,000க்கும் மேற்பட்ட வேலைகளை இது உருவாக்கியுள்ளது. இவற்றில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வேலைகளில் உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கரிமநீக்கத்திற்கான மாபெரும் சவால்

‘ஆர்ஐஇ2030’ திட்டத்தின்கீழ் $800 மில்லியன் மதிப்பில் கரிமநீக்கத்திற்கான மாபெரும் சவால் தொடங்கப்படுகிறது.

எரிசக்தித் துறையிலும் பிற தொழில்துறைகளிலும் கரிம உமிழ்வைக் குறைப்பதற்கான நம்பிக்கைக்குரிய தீர்வுகளுக்கு நிதியுதவியை கணிசமாக அதிகரிப்பதோடு, நம்பகமான, மீள்திறன்மிக்க எரிசக்திக் கட்டமைப்பை உறுதிசெய்வதே இந்த முதலீட்டின் நோக்கமாகும்.

இந்தச் சவாலின் ஒரு பகுதியாக, ‘சிங்கப்பூர் எரிசக்தி, தொழில்நிறுவனக் கரிமநீக்க முன்னோடித் திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும். இது உள்ளூர் ஆய்வு, உருவாக்க, செயல்விளக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதோடு, நம்பிக்கைக்குரிய புதிய தொழில்நுட்பங்களை விரிவுபடுத்துவதற்கான தனியார் முதலீடுகளையும் ஊக்குவிக்கும்.

மேலும், சிங்கப்பூர் தனது சூரிய மின்சக்தி இலக்கை 2030ஆம் ஆண்டிற்குள் 3 கிகாவாட்-பீக் ஆக உயர்த்தியுள்ளதாக டாக்டர் டான் அறிவித்தார்.

வட்டார நாடுகளிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்யவும், உயிர்மீத்தேன், குறைந்த கரிம ஹைட்ரஜன், கரிம உறிஞ்சல், பயன்பாடு, சேமிப்பு போன்ற குறைந்த கரிம மாற்றுவழிகளை ஆராயவும் சிங்கப்பூர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறிய அணுவுலைகள் போன்ற மேம்பட்ட அணுசக்தித் தொழில்நுட்பங்களின் சாத்தியமான பயன்பாடு குறித்தும் சிங்கப்பூர் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்