புதிய பேட்டர்சன் குடியிருப்புப் பகுதியில் 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய சாலைகள்

புதிய பேட்டர்சன் குடியிருப்புப் பகுதியில் 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய சாலைகள்

2 mins read
2e8caba3-d995-4e2e-b0af-152dad642f36
பேட்டர்சன் ரோடு, ஆர்ச்சர்ட் பொலிவார்ட், கிரேஞ்ச் ரோடு ஆகியவற்றால் சூழப்பட்ட நிலப்பரப்பு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ டைம்ஸ்
multi-img1 of 2

ஆர்ச்சர்ட் ரோட்டுப் பகுதிக்கு வெளியே பேட்டர்சனை ஒரு புதிய குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதற்காக, 2030ஆம் ஆண்டின் இறுதிக்குள் அயன் ஆர்ச்சர்ட் கடைத் தொகுதிக்கு எதிரே ஆர்ச்சர்ட் பொலிவார்ட், கிரேஞ்ச் ரோடு, பேட்டர்சன் ரோடு ஆகியவற்றை இணைக்கும் சாலைகள் அமைக்கப்படும்.

புதிய வீடுகள், கடைகள், பொது இடங்களைக் கொண்ட ஒரு கலப்புப் பயன்பாட்டுக் குடியிருப்புப் பகுதியாக பேட்டர்சன் பகுதியை மாற்றுவதற்கான நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

ஜூன் 2025ல் வெளியிடப்பட்ட அதன் அண்மைய வரைவு முதன்மைத் திட்டத்தில், பேட்டர்சனில் சுமார் 1,000 புதிய தனியார் வீடுகள் உருவாக்கப்படும் என்றும், அத்துடன் நிலத்தடி ஆர்ச்சர்ட் எம்ஆர்டி நிலையத்திற்கு மேலே அமைந்துள்ள சில்லறை மற்றும் அலுவலக இடங்களைக் கொண்ட ஒரு கலப்புப் பயன்பாட்டு மையமும் அமைக்கப்படும் என்றும் அது அறிவித்தது.

மார்ச் 24ஆம் தேதி அன்று அரசாங்க கொள்முதல் இணையத்தளமான ஜிபிஸ் (GeBiz) இணையவாசலில் ஆணையம் வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின்படி, புதிய சாலைகள் ஒவ்வொரு திசையிலும் இரண்டு வழித்தடங்களைக் கொண்டிருக்கும்.

இந்தச் சாலைகளை அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் வழங்குவதை ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் அந்த இடத்தை தன்வசப்படுத்திய நான்கு ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களில் கூறியுள்ளது.

கிரேஞ்ச் ரோடு, ஆர்ச்சர்ட் பொலிவார்ட், பேட்டர்சன் ரோடு ஆகியவற்றுடன் புதிய சாலைகள் சந்திக்கும் இடங்களில், புதிய சாலைச் சந்திப்புகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்களைக் கட்டுவதும் இந்தப் பணிகளில் அடங்கும்.

மேலும், பேட்டர்சன் பகுதியின் இந்த மாற்றம், மையப் பகுதிகளில் பலதரப்பட்ட வீட்டு வசதிகளையும், எளிதான போக்குவரத்து, பல்வேறு வசதிகளையும் விரும்பும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

இந்த மேம்பாடுகள், அப்பகுதிக்கு ஒரு பெரிய குடியிருப்பு மக்கள்தொகையைக் கொண்டுவந்து, ஆர்ச்சர்ட் ரோட்டுக்கு மேலும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நில ஆணையத்துடனான தனது குத்தகை 2020ல் முடிவடையும் வரை, தற்போது காலியாக உள்ள இந்த இடத்தை ஐஎஸ்எஸ் அனைத்துலகப் பள்ளி கடைசியாகப் பயன்படுத்தி வந்தது. இந்த இடம் 1991 முதல் 2015ஆம் ஆண்டு வரை வெளிநாட்டினருக்கான குடும்பப் பள்ளியால் (Overseas Family School) பயன்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்