தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2027 ஏப்ரல் 1 முதல் எல்லா மோட்டார்சைக்கிள்களிலும் புதிய பாதுகாப்பு அம்சம்

2 mins read
333b7d70-433b-4953-90a7-848020cd46a7
நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத தற்போதைய மோட்டார்சைக்கிள்களில் இந்தக் கருவியைப் பொருத்த வேண்டிய அவசியமில்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் 2027ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

திடீர் அல்லது கடுமையான வாகன நிறுத்தும் நிகழ்வுகளின்போது நிறுத்துவிசைகளின் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், மோட்டார்சைக்கிளின் நிலைத்தன்மையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமும், நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி சறுக்குதல் அபாயத்தைக் குறைக்கிறது.

செப்டம்பர் 16 அன்று ஓர் அறிக்கையில், புதிய தேவையை அறிவித்த நிலப் போக்குவரத்து ஆணையம், நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி இல்லாத தற்போதைய மோட்டார்சைக்கிள்களில் இந்தக் கருவியைப் பொருத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியது.

2024ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூரில் உள்ள மோட்டார் சைக்கிள்களில் பாதியளவு ஏற்கெனவே நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தப்பட்டுள்ளன.

மோட்டார் தொழில்துறை தனது தற்போதைய மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து, இந்தக் கருவி பொருத்தப்பட்ட ரகங்களைக் கொண்டுவர 18 மாத கால அவகாசம் தேவைப்படுகிறது.

புதிய தேவை அமலுக்கு வந்தவுடன், அனைத்து புதிய மோட்டார்சைக்கிள்களிலும் நிறுத்துவிசை அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதைக் கட்டாயமாக்கிய முதல் ஆசியான் நாடாக சிங்கப்பூர் இருக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள், பின்னிருக்கை பயணிகள், பிற சாலைப் பயனாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று ஆணையம் விவரித்தது.

2020ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஓர் அனைத்துலக ஆய்வை மேற்கோள் காட்டி, அத்தகைய கருவிகள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள், இந்தக் கருவி பொருத்தப்படாதவற்றுடன் ஒப்பிடும்போது 37 விழுக்காடு குறைவான உயிரிழப்பு விபத்து விகிதத்தைக் கொண்டுள்ளன என்றும் ஆணையம் தெரிவித்தது.

போக்குவரத்து காவல்துறையின் 2024ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து நிலவர அறிக்கை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட மரண விபத்துகள் 20.8 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கை பயணிகளின் இறப்புகள் 2024ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் காட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்