கட்டுமானத் தளங்களில் மரச் சாரக்கட்டுகளை மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்

கட்டுமானத் தளங்களில் மரச் சாரக்கட்டுகளை மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்

2 mins read
2027 ஜனவரியில் புதிய விதி நடப்புக்கு வருகிறது
54d418c7-ca43-4d78-a49e-2ec693205810
மனிதவள அமைச்சு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து, கட்டடங்களுக்கு வெளியே அமைக்கப்படும் சாரங்களைச் சுற்றியுள்ள வலைகளுக்குத் தீப்பாதுகாப்பு தரநிலைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கட்டுமானத் தளங்களில் ஏற்படும் சாரக்கட்டு தீ விபத்துகளைக் குறைக்க மனிதவள அமைச்சும் சிங்கப்பூர் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் சங்கமும் இணைந்து புதிய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளன.

சங்கத்தின் 2026ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், சுகாதார, பாதுகாப்பு இயக்க தொடக்க நிகழ்ச்சியில் இம்முயற்சிகள் அறிமுகம் கண்டன.

மரச் சாரங்களின் பயன்பாட்டு கால அளவைக் குறைப்பது அப்புதிய முயற்சிகளில் ஒன்று.

தற்போது ஒன்பது மாதங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய அக்கட்டைகள் 2027 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படலாம்.

எதிர்பாராத தீ விபத்துகள் ஏற்படும்போது மரச் சாரக்கட்டைகள் தீயை வேகமாகப் பரவச்செய்யும் அபாயம் இருப்பதால் இம்முயற்சி எடுக்கப்படுவதாக சங்கம் சொன்னது.

மேலும், மனிதவள அமைச்சு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து, கட்டடங்களுக்கு வெளியே அமைக்கப்படும் சாரங்களைச் சுற்றியுள்ள வலைகளுக்குத் தீப்பாதுகாப்பு தரநிலைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வுசெய்து வருகிறது.

‘பாதுகாப்புத் தரங்களை உயர்த்தல்' எனும் கருப்பொருளைக் கொண்ட இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

வேலையிடப் பாதுகாப்பிலும் சுகாதாரத்திலும் சிங்கப்பூர் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டிருந்தாலும், அது எதிர்கால வெற்றிகளை உறுதிசெய்யாது என்று அவர் எச்சரித்தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“கடந்த சில மாதங்களில், அபாயகரமான விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை தருகிறது. சிங்கப்பூர் தொடர்ந்து கட்டுமானத் துறையில் வளர்ந்துவரும் வேளையில், கட்டுமான ஊழியர்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஊழியர்களை நெருங்கியவர்களாகக் கருதுமாறு டாக்டர் டான் கட்டுமான நிறுவன முதலாளிகளைக் கோரினார்.

“நாம் ஒவ்வோர் ஊழியரையும் நமது நெருங்கிய குடும்ப உறுப்பினராகக் கருதினால், அவர்களது பாதுகாப்பில் நாம் செலுத்தும் அக்கறையும் நிச்சயம் உயரும். ஆகையால், அனைவரும் அதைச் செய்ய முனைவோம்,” என்றார் அவர்.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான்கு தூண்களை மையமாகக் கொள்ள வேண்டுமென டாக்டர் டான் கூறினார்.

திட்டமிடுதல் கட்டத்திலேயே ஆபத்துகளைக் குறைத்தல், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்புடன் இருத்தல், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து மெருகேற்றுதல் என்பவையே அந்த நான்கு தூண்களாகும்.

வேலையிடப் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்பாதுகாப்புஊழியர்கள்