விநியோக ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பயணப் பயிற்சித் திட்டம் தொடக்கம்

விநியோக ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பயணப் பயிற்சித் திட்டம் தொடக்கம்

2 mins read
598d877e-56d8-4658-873b-5bf7c1c16e22
மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், உணவு விநியோகப் பை பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளை புதன்கிழமை (ஆகஸ்ட் 12) ஓட்டிப் பார்த்தார். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உணவு மற்றும் பொருள் விநியோக ஊழியர்கள் சாலையில் பாதுகாப்பாகச் செல்வதற்கு உதவும் புதிய பாதுகாப்புத் திட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தொடங்கப்பட்டது.

அதிக எடையுள்ள விநியோகப் பைகளுடன் வாகனம் ஓட்டுதல், அடிக்கடி வாகனத்தை நிறுத்திச் செல்லுதல், குறுகிய பாதைகளில் செல்லுதல் போன்ற விநியோக ஊழியர்களின் அன்றாடச் சவால்களை எதிர்கொள்ள இத்திட்டம் உதவுகிறது.

கிராப் நிறுவனத்தின் கற்றல் அமைப்பான கிராப் அகாடமியும் சிங்கப்பூர் ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கமும் இணைந்து ‘மேம்பட்ட சவாரி வளர்ச்சித் திட்டம்: நகர்ப்புறச் சவாரி பாதுகாப்புப் பயிற்சி’ என்ற இத்திட்டத்தை வகுத்துள்ளன.

கிராப், ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், தேசிய விநியோக வெற்றியாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதனைத் தொடங்கின. எந்தவொரு நிறுவனத்தைச் சேர்ந்த விநியோக ஊழியரும் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

2026 முற்பாதியில் நான்கு விநியோக ஊழியர்கள் உயிரிழந்தனர். 2025 முழுவதும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆயர் ராஜா கிரசென்ட்டில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சாலை விபத்துகளில் பெரும்பாலானவற்றைத் தவிர்க்க முடியும் என்று கூறினார். முறையான பாதுகாப்பு வழிகாட்டல்களையும் சரியான பங்காளித்துவத்தையும் ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயர் ராஜாவில் நடைபெற்ற பயிற்சியில் முதற்தொகுதியாக 40 ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரப் பயிற்சியை ஐந்து தொண்டூழியப் பயிற்றுநர்கள் வழிநடத்தினர்.

வண்டியை பாதுகாப்பாக ஓட்டுதல், குறைந்த வேகக் கட்டுப்பாடு, அவசரகால பிரேக்கிங் நடைமுறைகள், எடையைச் சுமந்து செல்லும்போது வாகனத்தைச் சீராக வைத்திருத்தல், ஆபத்துகளை முன்கூட்டியே கணித்தல் ஆகியவை அதில் கற்பிக்கப்படுகின்றன.

பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முன்னுரிமைகளை எவ்வாறு நடைமுறைச் செயல்பாடுகளாக மாற்ற முடியும் என்பதற்கு இந்தப் பாதுகாப்புப் பயிற்சித் திட்டத்தின் தொடக்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திரு தினேஷ் கருத்துரைத்தார்.

இதற்கிடையே, கடும் வெப்பத்திலிருந்து விநியோக ஊழியர்களைப் பாதுகாக்க, இரு விசிறிகள், மின்கலன் பொருத்தப்பட்ட குளிரூட்டும் சட்டைகளை கிராப் நிறுவனம் சோதனை முறையில் வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 300 சட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் விநியோக ஊழியர் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், விநியோக ஊழியர்களுக்கு வேலைக் காய இழப்பீட்டுச் சலுகை கிடைக்கிறது. கருத்துகளின் அடிப்படையில் இந்தப் பயிற்சித் திட்டம் மேம்படுத்தப்படும் என்று கிராப் சிங்கப்பூர் நிர்வாக இயக்குநர் அலெயாண்ட்ரோ ஒசோரியோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
உணவுகிராப்விநியோகம்