சிங்கப்பூரின் உணவு-பானத் துறையைப் புதியதொரு மோசடி மிரட்டுகிறது.
அத்தகைய அச்சுறுத்தலுக்கு உள்ளான உணவு பான நிறுவனங்களில் மேலுமொன்று அண்மையில் இணைந்துள்ளது.
‘லெவல்33’ (LeVeL33), ‘முன்பதிவு’ போன்ற வார்த்தைகளை வாடிக்கையாளர்கள், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கூகல் தளத்தில் தேடும்போது, போலி இணையத்தளங்கள் தலைதூக்குவதாக அதிகாரத்துவ மதுபான-உணவகமான லெவல்33இன் நிறுவனர் டாக்டர் மார்ட்டின் பெம் கூறினார்.
பொதுவாக, வாடிக்கையாளர்கள் உணவகங்களின் அதிகாரத்துவ இணையத்தளங்களுக்குச் சென்று முன்பதிவு செய்யும் நடைமுறை வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்கள் போலி இணையத்தளங்களுக்குச் சென்று எப்போதும் போல் முன்பதிவைச் செய்து, கடன்பற்று அட்டையின் விவரங்களைக் கொடுத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வார இறுதியில் அத்தகைய சம்பவங்கள் குறித்து டாக்டர் பெம்முக்குத் தெரியவந்தது. உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள், முன்பதிவு செய்ததாகக் கூறினர். ஆனால் கணினிக் கட்டமைப்பில் முன்பதிவு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
சிலரிடம் $200 முதல் $2,000 வரை முன்பணம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. செலுத்தப்பட்ட கட்டணங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுவிட்டன. சம்பந்தப்பட்ட வங்கிகள், கடன்பற்று அட்டைகளிலிருந்து பணம் மாற்றப்படுவதைத் தடுத்ததாக டாக்டர் பெம் சொன்னார்.
நட்டமில்லை என்றபோதும் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே சம்பவம் பற்றிக் குறிப்பிட்டதாக அவர் கூறினார். பொதுவாக விழாக்காலத்தில் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் முன்பதிவுகளைச் செய்வர் என்றும் அதிகம் செலவிடுவர் என்றும் டாக்டர் பெம் தெரிவித்தார்.
லெவல்33இன் அதிகாரத்துவத் தளங்களான இணையத்தளமும் (level33.com.sg) ‘செவன்ரூம்ஸ்’ முன்பதிவு இணையவாசலும் ஊடுருவப்படவில்லை என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சம்பவத்தைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பு ஆணையம், கூகல், காவல்துறை முதலியவற்றிடம் புகார் கொடுத்திருப்பதாக டாக்டர் பெம் தெரிவித்தார்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
உணவகங்களின் போலி இணையத்தளங்களில் முன்பதிவு செய்வது குறித்தும் கட்டணங்களைச் செலுத்துவது பற்றியும் கவனத்துடன் இருக்குமாறு லெவல்33, அதன் இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளது.
இணைய உலாவியில் தேட முற்படும்போது, யுஆர்எல்லைச் சரிபார்க்குமாறு அது கேட்டுக்கொண்டது.
மாறாகத் தொலைபேசியில் அழைத்து உணவகங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அது ஆலோசனை கூறியது.
அண்மையில் உணவு பானத் துறை சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்கள் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டன.
இம்மாதம் (டிசம்பர் 2025) 5ஆம் தேதி, தெம்பனிசில் உள்ள உணவுக் கடை, போலி உணவு விநியோகக் கணக்குகளின் மூலம் $3,000 இழந்ததும் அவற்றில் அடங்கும்.

