சிங்கப்பூரில் இரு புதியவகை மோசடிகள் தலைதூக்கியுள்ளன.
பொருள்கள் வைத்து அனுப்பப்படும் பெட்டிகள் (பார்சல்) அல்லது தங்கக் கட்டிகள் ஆகியவற்றை சிங்கப்பூர் சுங்கத்துறை தடுத்து வைத்திருப்பதாகக் கூறி இந்த மோசடி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அவ்வாறு கூறும் மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் மக்களுக்கு அனுப்பப்பட்டு இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் சுங்கத்துறை புதன்கிழமை (டிசம்பர் 3) தெரிவித்தது.
அப்பொருள்களைப் பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டும், இல்லாவிடில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தி இந்த மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டணம் செலுத்துமாறு அல்லது தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிக்குமாறு ஏமாற்றப்படுபவர்கள் ‘கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’.
ஒருவகை மோசடியில் ஏமாற்றுக்காரர்கள் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள்போல் நடித்து sgpcustoms648171@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து, விதிமீறல் காரணமாக பார்சல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி மின்னஞ்சல் அனுப்புவர்.
சில நாள்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் சம்பந்தப்பட்ட பொருள்களுக்கான சோதனையை நேரில் சென்று பார்க்குமாறு பாதிக்கப்பட்டவர்களுக்குப் போலி எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பப்படுகிறது.
அந்தச் ‘சோதனை’க்கு நேரில் செல்வதற்குப் பதிலாக மலேசிய வங்கிக் கணக்கு ஒன்றுக்கு சரிபார்ப்புக் கட்டணத்தை (verification fee) செலுத்தலாம் என்று மோசடிக்காரர்கள் கூறுவர்.
இன்னொரு வகை மோசடியில், சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகளைப்போல் நடிக்கும் மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் வழி பிறரைத் தொடர்புகொள்வர். தொடர்புகொள்ளப்படுபவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட தங்கக் கட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை தடுத்து வைத்திருப்பதாக மோசடிக்காரர்கள் ‘தகவல்’ தெரிவிப்பர்.
அந்தத் தங்கக் கட்டிகளைச் சுங்கத்துறையிடமிருந்து பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்தவேண்டும் என்று மோசடிக்காரர்கள் கூறுவர். இல்லாவிடில் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் சுங்கத்துறை விதிமீறல் காரணமாக சம்பந்தப்பட்டோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருங்காலத்தில் பொருள்களைப் பெறவும் அனுப்பவும் தடை விதிக்கப்படும் என்றும் கூறி மோசடிக்காரர்கள் அச்சுறுத்துவர்.
தொடர்புடைய செய்திகள்
பார்சல்களை ஒப்படைக்கத் தாங்கள் கட்டணம் கேட்பதில்லை என்று சிங்கப்பூர் சுங்கத்துறை, பொதுமக்களுக்கு நினைவூட்டியது. மேலும், தாங்கள் அனுப்பும் அதிகாரபூர்வத் தகவல்கள் customs.gov.sg என்று முடியும் மின்னஞ்சல் முகவரிகளிலிருந்துதான் அனுப்பப்படும் என்றும் சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது. சுங்கத்துறை, அதிகாரபூர்வ விவகாரங்கள் குறித்து தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், வாட்ஸ்அப் போன்ற குறுந்தகவல் தளங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தெரியப்படுத்துவதில்லை என்றும் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
மோசடி நடக்கிறதா என்ற சந்தேகம் இருப்பவர்கள் customs_feedback@customs.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ 1799 என்ற ஸ்கேம்ஷீல்ட் உதவி அழைப்பு எண் வாயிலாகவோ தெரிந்துகொள்ளலாம்.

