தொழில்நுட்பத் துறையில் பெண்களை மீண்டும் பணியமர்த்த புதிய திட்டம்

தொழில்நுட்பத் துறையில் பெண்களை மீண்டும் பணியமர்த்த புதிய திட்டம்

3 mins read
அறிமுகம் செய்த டிசிஎஸ் நிறுவனம்
32ae3a40-3a9f-4e13-9e04-f34f612eb052
 ‘ரீ-பிகின்’ திட்ட அறிமுக விழா. - படம்: டிசிஎஸ் நிறுவனம்

தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலும் நீண்டகாலம் வேலையிலிருந்து விலகியிருந்தோரை மீண்டும் பணியமர்த்தும் நோக்கிலும் ‘ரீ-பிகின்’ (Re-begin) எனும் திட்டத்தை டிசிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

‘எஸ்ஜி தொழில்நுட்பத்தில் மாதர்’ (SG Women In Tech), என்டியுசி கற்றல் நடுவத்துடன் இணைந்து 2025ல் குறைந்தது 50 பெண்களை மீண்டும் பணியமர்த்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

“இத்திட்டம் தொழில்நுட்பத் துறையில் அடிப்படைத் திறன் உள்ள பெண்களுக்கு வேலைக்கான புதிய திறன் பயிற்சி அளிப்பதுடன், அவர்களின் வேலை, வாழ்க்கைச் சமநிலையையும் உறுதிசெய்யும்,” என்றார் அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் வட்டாரத் தொடர்புத் துறைத் தலைவர் ஐரிஸ் தாம். இத்திட்டம் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்குப் பொருந்தும் என்றும் அவர் சொன்னார்.

பெண்கள் சந்திக்கும் சவால்கள்

சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் ஏறத்தாழ 40 விழுக்காட்டுப் பெண் ஊழியர்கள் உள்ளனர். இது, மற்ற ஆசிய நாடுகளில் உள்ளதைக் காட்டிலும் அதிகம். எனினும், தலைமைத்துவப் பொறுப்புகளுக்குப் பதவி உயர்வு பெறுவதிலும் மகப்பேறு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக நீண்ட விடுப்புக்குப் பின் பணிக்குத் திரும்புவதிலும் சவால்கள் நீடிக்கின்றன.

சிங்கப்பூர் பெண் ஊழியர்களில் வெறும் 8 விழுக்காட்டினரே தலைமைத்துவப் பதவி வகிக்கின்றனர்.

இந்த நிலை மேம்பட வேண்டும் என்று கூறிய டிசிஎஸ் நிறுவனத்தின் சிங்கப்பூர் தலைவர் புனித் அகர்வால், பெண்களை மீண்டும் பணியமர்த்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.

“தொழில்நுட்பத் துறை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. அதற்கேற்ப ஊழியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்த வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

“குறைந்தது ஆறு மாதகாலம் பணியிலிருந்து இடைவெளி எடுப்பதே, புதிய தொழில்நுட்பங்களில் இருந்து விலகியது போலாகிறது. மீண்டும் பணிக்குத் திரும்புகையில், தொழில்நுட்பங்களில் தேர்ச்சி இல்லாததை நிறுவனங்கள் பின்னடைவாகக் கருதும் வாய்ப்பு பரவலாக உள்ளது. இதுவே விடுப்பு எடுத்த பெண்களைப் பணியமர்த்துவதில் பொதுவாக ஏற்படும் சிக்கல்,” என்றார் திரு புனித்.

குடும்பச் சூழல், குழந்தைகளைக் கவனிப்பது என தனிப்பட்ட வாழ்விலும் பணியிலும் சமநிலை எட்டுவதற்காக பெண்களுக்குத் தேவைப்படும் நீக்குப்போக்கு, அவர்களுக்குப் பணி மீதான அர்ப்பணிப்பு குறைவாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.

அதில் சமநிலையை எட்டுவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அதனை ஒரு தடையாகக் கருதக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதும் மென்திறன்களை வளர்ப்பதும் அவசியம் என்றும் சொன்னார் திரு புனித்.

இடைவெளி இருந்தாலும், விட்ட இடத்திலிருந்து தொடங்கும் வாய்ப்பை அளிப்பதுடன் அவர்களுக்கான வளர்ச்சிப் பாதையையும் அமைத்துத் தருவது ஒரு நிறுவனத்தின் கடமை என்றும் அவர் சுட்டினார்.

பெண்களின் சிறப்புத் திறன்கள்

“பெண்கள் பொதுவாகவே ஒரே நேரத்தில் பல பணிகளிலும் சிறப்பாகச் செயலாற்றும் வல்லமை பெற்றவர்கள். இயற்கையாகவே அத்திறனைப் பெற்றுள்ள பெண்களுக்கு உரிய வாய்ப்புகளை அளிப்பது நிறுவனங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்,” என்று சொன்னார் திரு புனித்.

திறன் இடைவெளி இருப்பதை உணர்ந்துள்ள நிறுவனங்கள் அதனை ஈடுசெய்ய, பெண்களின் திறன்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெண்கள் தங்கள் திறன்களைக் குறைத்து மதிப்பிடுவதை விடுத்து, கற்றலில் நம்பிக்கை வைத்து பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

‘ரீ-பிகின்’ திட்டம்

டிசிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இத்திட்டம் வாழ்நாள் கற்றலை மையமாகக் கொண்டு, பெண்களுக்கு உரிய வழிகாட்டுதலை அமைத்துத் தருகிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்கும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தித் தருகிறது.

பெண்களின் திறன்களை ஆராய்ந்து அவர்களுக்குரிய வாய்ப்புகளை அளிப்பதுடன் நிறுத்திவிடாமல், அவர்களின் ஆர்வத்தையும் இலக்கையும் அறிந்து அதற்குரிய பாதையையும் அமைத்துத் தரும் நோக்கம் கொண்டுள்ளது ரீ-பிகின் திட்டம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்