சக கைதிகளுடன் உறவாடி மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கும் புதிய கட்டமைப்பு ஒன்றைச் சிங்கப்பூர்ச் சிறைத்துறை செயல்படுத்தவுள்ளது.
சக கைதிகளுக்கு ஆதரவளிக்கப் பயிற்சி பெற்றுள்ள தகுதியான கைதிகள், தன்முனைப்பு மற்றும் உளவியல் சீர்திருத்தம் போன்ற முயற்சிகளில் சிங்கப்பூர்ச் சிறைத்துறை அதிகாரிகளுக்குத் துணைபுரிவர்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது உள்துறைக்கான மூத்த துணையமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
சமூகப் பங்காளித்துவத்தை மேம்படுத்தும் வகையிலும் முன்னாள் கைதிகளுக்கான மறுவாழ்வு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான சமூக ஆதரவைத் தூண்டும் விதமாகவும் மஞ்சள் நாடாத் திட்டம் இவ்வாண்டு மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் புழங்கிகளுக்கு மறுவாழ்வு தந்து அவர்களைச் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து குற்றம் புரியும் போதைப்பொருள் புழங்கிகளுக்குப் புதிய உளவியல் சார்ந்த சீர்திருத்தத் திட்டத்தைச் சிங்கப்பூர்ச் சிறைத்துறை செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
தனிப்பட்ட சிந்தனை, உணர்வுகளை ஆராய்தல், நடைமுறை சார்ந்த திறன் வளர்ச்சியை இந்தத் திட்டம் ஊக்குவிக்கும் என்றார் இணைப் பேராசிரியர் ஃபைஷால்.
மறுமுறை குற்றம் புரிவோரின் விழுக்காடு 2023ல் 4.7 விழுக்காடு குறைந்திருப்பதைச் சுட்டிய இணைப் பேராசிரியர் ஃபைஷால், சிங்கப்பூர் சிறைத்துறையின் சீர்திருத்த முயற்சிகள் ஊக்கம் தருபவை எனப் பாராட்டினார்.
குறிப்பாக, வெவ்வேறு பாலினங்களுக்கு ஏற்ற வகையில் சிங்கப்பூர்ச் சிறைத்துறை செயல்படுத்தும் திட்டங்கள், கடந்த ஆண்டில் அனைத்துலக அங்கீகாரம் பெற்றதையும் அவர் சுட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் கண்காணிக்கப்படுபவர்களுக்கு முடி சோதனை செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஃபைஷால், இதனால் அவர்கள் நேரில் முன்னிலையாக வேண்டிய தேவை குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

