இதயப் படபடப்பு, வயிற்று வலியால் பதினான்கு வயது சிறுவன் ஒருவன் 2023ஆம் ஆண்டு மத்திமப் பகுதி தொடங்கி சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தான்.
தனியார் மருத்துவர்கள், கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் சிறுவர் அவசரநிலை மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றபோதும் அவர்கள் அனைவரும் அந்தப் பதினான்கு வயது சிறுவனின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. சிறுவனுக்கு மருத்துவ ரீதியாக என்ன பிரச்சினை உள்ளது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்த அந்தச் சிறுவன் 2023ஆம் ஆண்டு இறுதியில் மீண்டும் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசரநிலை மருத்துவரை சந்திக்கச் சென்றான் வாடிய முகத்துடன் எவருடனும் பேச விருப்பப்படாமலும் அந்தச் சிறுவன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், மருத்துவமனையின் சமுதாய சேவைப் பிரிவைச் சேர்ந்த முகம்மது அர்ஷியாட் சுவாண்டி என்ற இளையர், பிரச்சினைகளை கவனிப்பவர். அந்தச் சிறுவனிடம் இரண்டு மணிநேரம் பேச்சுக்கொடுத்தார். அவரது கவலைகளை அறிய முற்பட்டார்.
அப்பொழுதுதான் அந்தச் சிறுவனுக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்தது. அவனுக்கு உடல் ரீதியாக எந்த நோயும் இல்லை என்பது தெரியவந்தது.
அந்தச் சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது. நீதிமன்றத்தில் அவன் முன்னிலையாக வேண்டிய தேதி முடிவானதும் அவனுக்கு உடல் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவனுக்கு பதற்றம் ஏற்பட்டதால் அவனது உடலிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன என்று அர்ஷியாட் கூறுகிறார்.
அந்த இளைஞனை மேற்கொண்டு பரிசோதித்துப் பார்க்க அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அத்துடன், அந்த இளைஞன் அனுமதிக்கப்பட்டிருந்த இல்லத்துடன் அர்ஷியாட் தொடர்புகொண்டு அவனுக்கு உளவியல் ரீதியாக தேவைப்படும் ஆதரவுக்கு ஏற்பாடு செய்தார்.
அந்தச் சிறுவன், 10 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 2,800 பேர் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் சிறார் அவசரநிலை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒருவன். இந்தத் திட்டம் தெமாசெக் இளையர் தொடர்புத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது.

