தொலைவிலிருந்து மூத்தோர் உடல்நலனைக் கண்காணிக்க புதிய திட்டம்

தொலைவிலிருந்து மூத்தோர் உடல்நலனைக் கண்காணிக்க புதிய திட்டம்

2 mins read
a48db95a-c928-4c59-bbc3-c466850b5a03
கைப்பேசி செயலியுடன் இணைக்கப்பட்ட ரத்த அழுத்தக் கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்துகிறார் திருவாட்டி யோங் யோக் குவாய், 74. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எளிதில் பாதிப்படையக்கூடிய மூத்த குடிமக்களுக்கான புதிய முன்னோட்டத் திட்டம் ஒன்றின்வழி பராமரிப்பு வழங்குவோர் தொலைவில் இருந்தவாறே மூத்தோரது உடல்நலத்தைக் கண்காணிக்க முடியும்.

இவ்வாறு மூத்த குடிமக்களைக் கண்காணிக்கும்போது, தனியாக வாழும் முதியவர்கள் உள்ளிட்டோர்க்கு பராமரிப்பும் ஆதரவும் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய இயலும்.

‘மூத்தோருக்கான தொலைவழிக் கண்காணிப்பு, ஆதரவு திட்டம்’ என்றழைக்கப்படும் இதன்கீழ், ஆக்சிமீட்டர், ரத்த அழுத்தக் கண்காணிப்புக் கருவிகள் போன்றவற்றை முதியவர்கள் பயன்படுத்தித் தங்களின் ரத்த உயிர்வாயு அளவு, இதயத் துடிப்பு விகிதம், ரத்த அழுத்தம் போன்றவற்றை நாள்தோறும் அளவிட இயலும்.

பராமரிப்பு நல்வாழ்வுச் சங்கத்தின் (Caregiving Welfare Association) பராமரிப்புக் குழுவுக்கு உடனுக்குடன் தரவுகளை அனுப்பும் ஆற்றல் இந்தக் கருவிகளுக்கு உண்டு.

தரவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலோ கருவிகளில் அளவிடப்பட்டதை முதியவர்கள் பதிவுசெய்யத் தவறினாலோ பராமரிப்பாளர்கள் உடனே தலையிட்டு உதவி வழங்கலாம்.

முதியவர்களின் உடல்நலத்தை இம்முறையில் கண்காணிக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியமும் குறையும். அதேவேளை முதியோர் பராமரிப்பு இல்லத்தை நாடாமல், தங்களது சொந்த வீடுகளிலேயே முதியவர்கள் தங்களது இறுதிக் காலத்தைக் கழிக்கலாம்.

கீழே விழும் அபாயம் அதிகமுள்ளோரையும் கண்காணிக்க, இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

பராமரிப்பாளர்களுக்காகவும் முதியவர்களுக்காகவும் செங்காங் கிராண்ட் மால் கடைத்தொகுதியில் செப்டம்பர் 21ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ‘கேர்கிவிங் ஃபெஸ்ட்’ நிகழ்வில் இத்திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தனியாக வசிக்கும் 65 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் 2023ஆம் ஆண்டில் 78,000க்கும் மேல் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தாங்கள் இத்திட்டத்தின்கீழ் கருவிகளைப் பயன்படுத்த பொருத்தமானவர்களா என்பதை உறுதிசெய்ய தற்போது கிட்டத்தட்ட 20 முதியவர்கள் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்திப் பார்ப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்து வந்தது.

இத்தகைய திட்டங்களால் எளிதில் பாதிப்படையக்கூடிய, தனித்து வாழும் முதியவர்களுக்குக் குறித்த நேரத்தில் ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்யலாம் என்று நிகழ்வுக்கு வருகை தந்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சரும் வெளியுறவு மூத்த துணை அமைச்சருமான சிம் ஆன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்