தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாரம்பரியத் தொழில்களை ஆதரிக்க மார்ச் 20 முதல் முன்மொழியலாம்

2 mins read
0c45c87e-0042-4fbf-b01f-6ac5e303a10a
மரபுடைமை வர்த்தகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று சிங்கப்பூரர்கள் பரவலாகக் கேட்டுக்கொண்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியத் தொழில்களைப் புதிதாக அறிவிக்கப்பட்ட சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 20) முதல் முன்மொழியலாம்.

மே 18ஆம் தேதி வரை அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய மரபுடைமைக் கழகம், புதன்கிழமை (மார்ச் 19) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தது.

திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தொழில்களைப் பிரபலப்படுத்த தேசிய மரபுடைமைக் கழகம் ஆலோசனை வழங்கும்.

சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தில் உள்ள லிட்டில் இந்தியா, கம்போங் கிளாம், சைனாடவுன் ஆகிய இடங்களில் குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது செயல்பட்டுவரும் வர்த்தகங்களுக்குச் சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டம் கைகொடுக்கும்.

இத்திட்டத்துக்காக லிட்டில் இந்தியாவில் குறிப்பிட்ட சில வர்த்தகங்களை அடையாளம் கண்டுள்ளதாக லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் (லி‌‌‌ஷா) தெரிவித்தது.

“நகை வேலை செய்யும் பத்தர் கடைகள், ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை, கோமள விலாஸ் போன்றவை அவற்றில் அடங்கும். அத்தகைய வர்த்தகங்கள் தங்களையே முன்மொழியும்படி ஊக்குவிப்போம்,” என்று தெரிவித்தார் லி‌‌‌ஷா அமைப்பின் தலைவர் ரகுநாத் சிவா.

திட்டத்தில் இணையும் வர்த்தகங்களுக்குத் தனி மரபுடைமை முத்திரையும் வடிவமைக்கப்படும்.

அந்த முத்திரையின் மூலம் பொதுமக்களின் ஆதரவை ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் மரபுடைமைத் தொழில் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி ஒதுக்கீட்டுக் கூட்டத்தின்போது கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் அறிவித்தார்.

இதற்கிடையே, தேசிய மரபுடைமை நிலையம் சென்ற ஆண்டு, கிட்டத்தட்ட 2,000 பேரிடம் நடத்திய கருத்தாய்வில் 75 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பாரம்பரியத் தொழில்கள் சிங்கப்பூரின் அக்கம்பக்க உணர்வை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தனர்.

“பாரம்பரியத் தொழில்கள் நலிந்துபோவதைத் தடுக்க சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும். அத்தகைய தொழில்களுக்கு நாம்தான் ஆதரவளிக்க வேண்டும்,” என்று தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபு, கொள்கை ஆய்வுப் பிரிவு இயக்குநர் மெலிசா மே டான் கூறினார்.

திட்டத்தில் இணைய விரும்பும் வர்த்தகங்கள் தங்களையும் இதர வர்த்தகங்களையும் முன்மொழியலாம்.

எந்தெந்த வர்த்தகங்கள் திட்டத்தில் சேர்க்கப்படவிருக்கின்றன என்பதை தேசிய மரபுடைமைக் கழகம் இவ்வாண்டுப் பிற்பாதியில் அறிவிக்கும்.

மேல்விவரங்களுக்கு தேசிய மரபுடைமைக் கழகத்தின் இணையத்தளத்தை (https://www.nhb.gov.sg/) நாடலாம்.

லிட்டில் இந்தியாவின் சில பாரம்பரிய வர்த்தகங்களைத் திட்டத்தில் இணையும்படி ‘லி‌‌‌ஷா’  ஊக்குவிக்கவிருக்கிறது. (லி‌‌‌ஷா தலைவர் ரெகுநாத் சிவா).
லிட்டில் இந்தியாவின் சில பாரம்பரிய வர்த்தகங்களைத் திட்டத்தில் இணையும்படி ‘லி‌‌‌ஷா’ ஊக்குவிக்கவிருக்கிறது. (லி‌‌‌ஷா தலைவர் ரெகுநாத் சிவா). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்