உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் புதிதாக சர்விஸ்எஸ்ஜி (ServiceSG) எனும் ஒருங்கிணைந்த சேவை நிலையம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. அதில் 600க்கும் மேற்பட்ட அரசாங்கச் சேவைகளைக் குடியிருப்பாளர்கள் எளிதில் பெறமுடியும்.
உட்லண்ட்ஸ் சிவிக் சென்டரில் இந்த நிலையம் அமைந்துள்ளது. 2021ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் திறக்கப்பட்ட ஒன்பதாவது சர்விஸ்எஸ்ஜி நிலையம் இது.
சர்விஸ்எஸ்ஜி நிலையங்களில் 25 அரசாங்க அமைப்புகளின் கீழ் வரும் பல்வேறு சேவைகளைச் சிங்கப்பூரர்கள் பெறலாம். சிங்பாஸ் கணக்குகளைத் தொடங்குவதிலிருந்து, வரி செலுத்துவது, கடப்பிதழ் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மக்கள் பெறமுடியும்.
சனிக்கிழமை (மார்ச் 15) நடந்த நிலையத்தின் திறப்பு விழாவில் பொதுப்பணித்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டார்.
“பொதுப்பணித்துறைக்குக் கீழ் செயல்படும் திட்டங்களில் சர்விஸ்எஸ்ஜி நிலையங்களும் ஒன்று. மின்னிலக்க உலகில் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் குறித்த விவரங்கள் அனைத்தும் சரியாகச் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்,” என்றார் அமைச்சர் சான்.
சேவைகளை மின்னிலக்க வாயிலாகப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு உதவும் விதமாக சர்விஸ்எஸ்ஜி நிலையங்கள் உள்ளன என்றார் அவர்.
இந்நிலையில், அங் மோ கியோவில் 2026ஆம் ஆண்டு நடுப்பகுதியில் புதிய சர்விஸ்எஸ்ஜி நிலையம் திறக்கப்படும் என்று திறப்பு விழாவில் கல்வி அமைச்சருமான சான் அறிவித்தார். புதிய நிலையம் அங் மோ கியோ டவுன் சென்டரில் அமைகிறது.
உட்லண்ட்ஸ் சர்விஸ்எஸ்ஜி நிலையம் திறக்கப்பட்டதிலிருந்து மாதம் சராசரியாக 5,500 சேவைகளுக்கான உதவிகளை மக்கள் நாடியுள்ளனர். இது மற்ற நிலையங்களை ஒப்பிடுகையில் ஆக அதிகமாக உள்ளது.

