ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, கற்பிப்பதற்கும் மாணவர்களுடன் உரையாடுவதற்கும் கூடுதல் நேரத்தை வழங்கும் நோக்கில் கல்வி அமைச்சு புதிய திட்டங்களை ஆராய்ந்து வருகிறது.
இவற்றின்கீழ், ஆசிரியர்களின் கற்பித்தல்சாராப் பணிப் பொறுப்புகள் சீரமைக்கப்படுவதுடன், மாணவர்களிடம் அதிகக் கவனம் செலுத்த ஏதுவாக வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம்.
வரும் 2027 ஜனவரி மாதம் முதல் ஆறு பள்ளிகளில் முன்னோடித் திட்டமாக இம்மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
வகுப்பறை கற்பித்தல் தவிர்த்து, வகுப்பு ஆசிரியர் பொறுப்பு, துணைப்பாட நடவடிக்கை, குழுப் பணிகள் ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளில் ஏதேனும் இரு பொறுப்புகளில் மட்டும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த அனுமதிப்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் புதன்கிழமை (செப்டம்பர் 16) நடைபெற்ற பள்ளிகள் வேலைத்திட்டக் கருத்தரங்கில் 1,900க்கும் மேற்பட்ட பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களிடையே உரையாற்றியபோது அமைச்சர் இதன் தொடர்பில் பேசினார். ‘முழுமையான வளர்ச்சி, நோக்கமுள்ள கற்பித்தல்’ எனும் கருப்பொருளில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
வெவ்வேறு பொறுப்புகளுக்கு இடையே மாறிமாறிச் செயல்படுவது ஆசிரியர்களின் நேரத்தை மட்டுமல்லாது மன ஆற்றலையும் பாதிப்பதாக அமைச்சர் லீ சுட்டிக்காட்டினார். இரு பொறுப்புகளில் மட்டும் கவனம் செலுத்த அனுமதிப்பதன் மூலம் ஆசிரியர்கள் சிறந்த வகுப்பறை நடைமுறைகளில் தங்கள் ஆற்றலை முதலீடு செய்ய முடியும் என்றார் அவர்.
அதேவேளை, சிறிய வகுப்பறைகளை அமைப்பதன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கவனமும் உடனுக்குடன் பின்னூட்டங்களும் வழங்க முடியும் என்றும், இது கற்பித்தலையும் கற்றலையும் மறுவடிவமைப்பு செய்யும் விரிவான திட்டத்தின் ஓர் அங்கமாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.
இரு முக்கிய மாற்றங்கள்
எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் மாணவர்களை ஆயத்தப்படுத்துவது பாட அறிவோடு நின்றுவிடக்கூடாது என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது உரையில் வலியுறுத்தினார்.
“எதிர்காலத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவது என்பது அவர்கள் என்ன கற்கிறார்கள் என்பதில் மட்டுமல்லாமல், எப்படிக் கற்கிறார்கள் என்பதிலும் உள்ளது,” என்று கூறிய திரு லீ, பாடப் புலமையும் துறை சார்ந்த அறிவும் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, மாணவர்கள் கற்ற அறிவை ஒன்றிணைத்து உண்மையான உலகச் சவால்களுக்குப் பயன்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்வதுடன், தங்களது கற்றலுக்குத் தாங்களே பொறுப்பேற்கும் பழக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
முதலாவது மாற்றம் கற்றலை மறுபரிசீலனை செய்வதாகும்.
இதன்கீழ் மாணவர்கள் பாட அறிவைப் பெறுவதோடு நிற்காமல், வினா-சார்ந்த கற்றல், கூட்டுக்கற்றல் போன்ற மாணவர் மையக் கற்பித்தல் முறைகளை அன்றாட வகுப்பறைகளில் ஆழமாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்குப் பயனுள்ள பின்னூட்டங்களை வழங்கும் முறைகளும் மறுஆய்வு செய்யப்படும்.
“பயனுள்ள பின்னூட்டங்களும் மாணவர் மையக் கற்பித்தலும் இணைந்து மாணவர்களைத் தன்னம்பிக்கையும் நீக்குப்போக்கும் கொண்ட சுயவழிகாட்டல் கல்வியாளர்களாக மாற்ற உதவும்,” என்று திரு லீ குறிப்பிட்டார்.
இரண்டாவது மாற்றம் வகுப்பறைகளை மறுவடிவமைப்பதாகும்.
“நாளைய வகுப்பறைகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கும். ஆசிரியர்கள் கலந்துரையாடல்களை வழிநடத்துபவர்களாகவும், மாணவர்களின் சிந்தனையைக் கவனித்துத் தேவையான நேரத்தில் பின்னூட்டம் வழங்குபவர்களாகவும் திகழ்வர்,” என்றார் திரு லீ.
இத்தகைய புதிய கற்பித்தல் முறைகளைச் செயல்படுத்த ஆசிரியர்களுக்குக் கூடுதல் நேரமும் அவகாசமும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து அவர்களைக் கற்பித்தலில் கவனம் செலுத்த வைக்க நான்கு முக்கிய உத்திகளை அமைச்சு ஆராயும் எனத் தெரிவித்தார்.
எளிதில் மாற்றியமைக்கக்கூடிய தளவாடங்கள் கொண்ட நீக்குப்போக்குடன் கூடிய கற்றல் இடங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் பணிப் பொறுப்புகளைச் சீரமைப்பது, தேவைப்படும் இடங்களில் சிறிய வகுப்பறைகளை அமைப்பது, ஆசிரியர்களின் அன்றாடப் பணிகளை எளிமையாக்கும் ‘டீச்சர் வொர்க்ஸ்பேஸ்’ போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஆகிய நான்கு உத்திகள் இதில் அடங்கும்.
வரும் 2027 ஜனவரி மாதம் முதல் இம்மாற்றங்கள் செயின்ட் ஆன்டனிஸ் கனோஸியன் தொடக்கப்பள்ளி, உட்குரோவ் தொடக்கப்பள்ளி, சாங்ட தொடக்கப்பள்ளி, காமன்வெல்த் உயர்நிலைப்பள்ளி, டெயி உயர்நிலைப்பள்ளி, ஜூரோங்வில் உயர்நிலைப்பள்ளி ஆகிய ஆறு பள்ளிகளில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படும்.
டெயி உயர்நிலைப்பள்ளியின் ஆயத்தப் பணிகள்
வரும் 2027 ஜனவரி மாதம் முதல் இம்மாற்றங்கள் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்படவுள்ள ஆறு பள்ளிகளில் டெயி உயர்நிலைப்பள்ளியும் ஒன்றாகும்.
இன்னும் முன்னோடித் திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை என்றாலும், இம்மாற்றங்கள் வரவேற்கத்தக்கவையாக இருப்பதாக அப்பள்ளியின் துணை முதல்வர் அப்பல்லோஸ் இந்துசூடன், 58, கூறினார்.
“வகுப்பறைகளில் பாரம்பரிய ஆசிரியர் மையக் கற்பித்தல் முறையிலிருந்து விலகி, மாணவர்கள் தாங்களாகவே ஆராய்ந்து கற்கும் சுயமாகக் கற்கும் திறனை ஊக்குவிப்பதே எங்களின் முதன்மை நோக்கம்,” என்று திரு அப்பல்லோஸ் கூறினார்.
இம்மாற்றத்திற்குத் துணைபுரியும் வகையில் டெயி உயர்நிலைப்பள்ளி தனது முதல் ‘நீடித்த நிலைத்தன்மை அறையை’ அமைத்து வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பக் கண்ணாடிகள், மின்னிலக்கப் பலகைகள், நகர்த்தக்கூடிய தளவாடங்கள் கொண்ட இந்த அறையில் புவியியல், அறிவியல் பாடங்கள் முற்றிலும் மாறுபட்ட அனுபவங்களாக இருக்கும் என்றார் திரு அப்பல்லோஸ்.
வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் ஒரே வேலையைச் செய்யும் முறையை மாற்ற விரும்புவதாகத் தெரிவித்த அவர், புதிய அமைப்பில் ஒரே வகுப்பறையின் ஒரு பகுதியில் ஆசிரியர் சிறிய குழுவிற்குப் பாடம் நடத்தலாம் என்றும், நடுப்பகுதியில் மாணவர்கள் குழுவாக விவாதிக்கலாம் என்றும், பின் பகுதியில் சிலர் அமைதியாகச் சுய ஆய்வு செய்யலாம் என்றும் கூறினார்.
சிறிய வகுப்பு அளவுகள் இத்தகைய மாறுபட்ட கற்பித்தலுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆசிரியர்கள் தனித்துச் செயல்படாமல் ‘தொழில்முறை கற்றல் குழுக்கள்’ வழியாக இணைந்து பாடங்களை வடிவமைப்பார்கள். இத்தகைய கூட்டுப் பணிச் சூழல் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதுடன், அவர்களின் தொழில்முறை வளர்ச்சியையும் மனநலனையும் ஒருசேர மேம்படுத்தும் என்று திரு அப்பல்லோஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
