‘உணவை’ கதாபாத்திரமாகக் கொண்ட புதிய சிறுகதைத் தொகுப்பு

‘உணவை’ கதாபாத்திரமாகக் கொண்ட புதிய சிறுகதைத் தொகுப்பு

படம்: லிஜே‌ஷ்

27 Sep 2026 - 10:09 am

2 mins read

‘நாவு நினைவில் வைத்திருப்பது’ (What the Tongue Remembers). இது, அனிதா தேவி பிள்ளையின் பதினொன்றாவது நூல். இது அவரது முதல் சிறுகதைத் தொகுப்பும் ஆகும்.

300 பக்கங்கள் கொண்ட நூலில், உணவு என்பது வெறும் பொருள் அல்ல, கதையின் இடையே அமைதியாக உலா வரும் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாகவே படைக்கப்பட்டுள்ளது.

மலையாளச் சமூகத்தின் பின்னணியில் இருந்து ஈர்க்கப்பட்ட அனிதா தொகுத்து வழங்கிய கதைகள், மலையாளப் பெண்களின் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் உள்ள வண்ணமயமான வாழ்க்கையை விரிவாக ஆராய்கின்றன.

சிங்கப்பூர் மலையாளி சமூகத்தை ஆர்வத்துடன் ஆய்வுசெய்த பயன்பாட்டு மொழியியலாளரும் கல்வியாளருமான அனிதா, குறிப்பிட்ட ஒரு நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டிற்காகச் செல்வதுதான் புலம்பெயர்வு என்ற கண்ணோட்டத்திலிருந்து மாறுபட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார்.

மாறாக, ஓரிடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த பிறகும் மக்களின் அடையாளம் எவ்வாறு உருமாறுகிறது என்பதை எடுத்துக்காட்ட அவர் விரும்பினார்.

அதன் அடிப்படையில் அவருடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் கேரளத்துடன் ஆழ்ந்த பிணைப்பு கொண்டவர்கள் முதல் அதனுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாதவர்கள் வரையில், மலையாள மொழியை சரளமாகப் பேசுபவர்கள் முதல் தங்கள் அடையாளத்தை வேறுபட்ட வழிகளில் வெளிப்படுத்துபவர்கள் வரையில் பரந்துபட்டு அமைந்துள்ளன.

நூலில் இடம்பெறும் அடையாளம் குறித்த கேள்வி, உணவு தொடர்பான உரையாடல்களிலும் வெளிப்படுகிறது. அனிதா அதைத் தமது கதைகளின் வழி ஆராய்கிறார்.

‘நாவு நினைவில் வைத்திருப்பது’ என்ற தொகுப்பில் உள்ள பதினொரு சிறுகதைகளில் ஒன்றில் சிங்கப்பூர் மலையாளிப் பெண் ஒருவர், தமது கணவர் உண்மை என்று கருதும் கேரள உணவும் சிறுவயதில் தாம் சுவைத்து வளர்ந்த கேரள உணவும் மாறுபட்டு இருப்பதை உணர்கிறார்.

ஏனெனில், வெவ்வேறு பகுதிகளுக்கு மக்களுடன் புலம்பெயரும் அவர்களின் உணவுப் பழக்கங்களின் செய்முறைகள் காலப்போக்கில் மாற்றமடைகின்றன.

“கதையில் வரும் சிறிய குடும்பச் சண்டை ஒரு மிகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது. எது ‘உண்மையானது’ என்பதை யார் தீர்மானிக்க முடியும்?” என்றார் அனிதா.

‘நாவு நினைவில் வைத்திருப்பது’ நூல் இம்மாதம் 20ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தில் வெளியிடப்பட்டது.

கலாசார, சமூக, இளையர் துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சிங்கப்பூருக்கான கனடா தூதர் பால் தோப்பில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்