பிரதமர் லாரன்ஸ் வோங் தமது முதல் தேசிய தினப் பேரணி உரையை ஆகஸ்ட் 18ஆம் தேதி அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைமையகத்தில் நிகழ்த்தினார்.
மலாய் மொழியில் உரையை நிகழ்த்தியபோது பிரதமர் வோங் சிங்கப்பூரில் இஸ்லாமிய கல்விக்காகப் புதிய கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்தார். அது சிங்கப்பூர் இஸ்லாமிய கல்லூரி என்று அழைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலாய்-முஸ்லிம் சமூகத்தினருக்கான புதிய திட்டம் இது. இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் புதிய இஸ்லாமிய தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள் என்று பிரதமர் வோங் கூறினார்.
கல்லூரி தொடர்பான மேல் விவரங்கள் தயாரானதும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கல்லூரி தொடர்பான யோசனையை தெரிவித்தார்.
கல்லூரி மூலம் சமயம் சார்ந்த கல்விமான்களையும் ஆசிரியர்களையும் உருவாக்க முடியும் பயிற்சிதர முடியும். அவர்களை ‘அசாடிசா’ என்றும் கூறுவார்கள். பல்லின கலாசாரம்,பல சமயங்களைக் கொண்ட சிங்கப்பூரில் அசாடிசா ஆசிரியர்களால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு தகுந்த சமய வழிகாட்டுதல்களை வழங்க முடியும்.
சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (மியூஸ்), எகிப்து, ஜோர்தான், துருக்கி, மொராக்கோ, பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் இஸ்லாமிய கல்லூரிகளுக்கு சென்று, அங்கு எவ்வாறு பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது என்பதை ஆராய்ந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மியூஸ் பென்கூலன் ஸ்திரீட்டில் இஸ்லாமிய கல்விக்காக முதுகலை சான்றிதழ் படிப்பை தொடங்கியது. அதற்காக 5 மாடி கொண்ட வளாகம் திறக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் பிரதமர்களைப் போலவே தாமும் மலாய்-முஸ்லிம் தலைவர்களுடன் நெருக்கமாக செயல்படுவேன் என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.