இளைய தலைமுறையினரை ஈர்க்க பெரித்தா ஹரியான் நாளிதழ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தளம்

இளைய தலைமுறையினரை ஈர்க்க பெரித்தா ஹரியான் நாளிதழ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தளம்

3 mins read
0c00bd4a-1f49-4e80-8933-82168c4a3f4a
புதிய தளத்தின் அதிகாரபூர்வ தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஸாக்கி முகமது (நடுவில்). - படம்: பெரித்தா ஹரியான்

இளையர்களை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூரின் மலாய் மொழி நாளிதழான பெரித்தா ஹரியான் இளம் பார்வையாளர் தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் இளம் பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் செய்திகளை விளக்க இத்தளம் வழிவகுக்கும்.

இன்ஸ்டகிராம், யூடியூப், டிக்டாக் போன்ற தளங்களில் படங்கள், விளக்கப்படங்கள், நீண்ட வடிவக் காணொளிகள் போன்ற புத்தாக்க வடிவங்கள் மூலம் 21 முதல் 34 வயதுக்கு உட்பட்ட இளையர்களை செய்தித்தளத்துடன் இணைக்க இந்தப் புதிய தளம் கைகொடுக்கும்.

ஓஎம்ஜிxபிஎச் (OMGxBH) என்ற அத்தளத்தின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய பெரித்தா ஹரியான் நாளிதழின் ஆசிரியர் நஸ்ரி மொக்தார், “நாங்கள் சென்ற ஆண்டு வாசகர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில் மலாய் இளையர்கள் ஆர்வமூட்டும் வகைகளில் செய்தியைப் படிக்க விரும்புவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

இளையர்கள் சார்ந்த கலந்துரையாடல்கள், மலாய் சமூகத்தினரை மையமாக வைத்து எடுக்கப்படும் காணொளிகள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு, மலாய் சமூகத்தில் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் போன்ற எழுச்சியூட்டும் ஆளுமைகளின் நேர்காணல்கள் போன்றவை இத்தளத்தில் இடம்பெறும்.

தளத்தின் உள்ளடக்கம் ஆங்கிலம், மலாய் மொழிகளில் இருக்கும்.

கடந்த டிசம்பர் மாதம் தளம் வெள்ளோட்டம் கண்டது முதல் இந்நாள் வரை 37,000 பேர் இதைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பின்தொடர்வதாகத் திரு நஸ்ரி சொன்னார்.

இது தொடக்கத்தில் அவர்கள் வைத்திருந்த 16,500 பேர் எனும் இலக்கைவிட இரண்டு மடங்குக்குமேல்.

இளைய தலைமுறையினர் பணியிடத்தில் பயன்படுத்தும் சொற்களை வைத்து எடுக்கப்பட்ட காணொளி டிக்டாக் தளத்தில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

திருவாட்டி ஹலிமாவுடன் கலந்துரையாடும் காணொளி ஒன்று டிக்டாக், இன்ஸ்டகிராம் தளங்களில் அரை மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டது.

மே மாதத்தில் இத்தளம் மாதாந்தர உரையாடல் அங்கம் ஒன்றைத் தொடங்கியது. லசால் கலைக் கல்லூரியின் ‘வொர்கிங் டைட்டில் கஃபே’யில் இடம்பெறும் இந்த உரையாடல் அங்கத்தில் கலந்துகொள்வோர் பேச்சாளர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

திருவாட்டி ஹலிமா போன்ற பேச்சாளர்கள் அந்த உரையாடலில் கலந்துகொண்டுள்ளனர். இந்த உரையாடல் அங்கம் ஆங்கிலத்தில் நடைபெறும். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.

தளத்தின் அதிகாரபூர்வத் தொடக்கவிழாவில் கலந்துகொண்ட தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது, சமூக ஊடகத் தளங்கள் மூலம் செய்திகளை வாசிப்பது இளையர்கள் மத்தியில் இப்போது வழக்கம் என்றார்.

பெரித்தா ஹரியான் எடுத்துள்ள இம்முயற்சியைப் பாராட்டிய அவர், “இத்தளத்தைப் பயன்படுத்தும் 80 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோர் 21லிருந்து 34 வயதுக்கு உட்பட்டவர்கள்,” என்றார்.

“இந்த வயதுப் பிரிவினர் பெரும்பாலும் செய்தித்தாள்களை வாசிப்பதில்லை. இந்தப் புதிய தளம் மூலம் அவர்களை ஈர்க்கலாம். பெரித்தா ஹரியான் மலாய்ச் சமூகத்தினருக்குத் தேவையான தகவல்களை அளிப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. அரசாங்க அமைப்புகளும், மலாய், முஸ்லிம் அமைப்புகளும் இத்தளம் மூலம் இளைய தலைமுறையினரைச் சென்றடையத் தொடங்க வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்