சாங்கி விமான நிலைய முனையம் 3 அருகே புதிய ஆறு மாடி அலுவலகக் கட்டடம்

சாங்கி விமான நிலைய முனையம் 3 அருகே புதிய ஆறு மாடி அலுவலகக் கட்டடம்

ஐந்தாம் முனையம் 2030ஆம் ஆண்டு மத்தியில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 May 2026 - 9:30 pm

2 mins read

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை நிர்வகிக்கும் சாங்கி விமான நிலையக் குழுமம் (சிஏஜி) விமான நிலைய முனையம் மூன்றுக்கு அருகில் ஓர் ஆறு மாடி அலுவலகக் கட்டடத்தைக் கட்டத் திட்டமிடுகிறது.

நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் (யுஆர்ஏ) அதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டதாகவும் குழுமம் தெரிவித்துள்ளது.

குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளுக்கு முன்பாக பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் அந்தக் கட்டடம் அமையும். திட்டத்தில் கட்டடம் அருகே கூரையுடன் அமைந்த பயணிகள் பேருந்து நிறுத்தமும் உள்ளடங்கும்.

திட்டப்படி, ஏறத்தாழ 13,000 சதுர மீட்டர் பரப்பளவு வர்த்தகப் பயன்பாட்டுக்கும் 2,600 சதுர மீட்டர் பரப்பளவு விமான நிலையத்தின் பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (மே 4) ஊடகக் கேள்விக்குப் பதிலளித்த குழுமத்தின் பேச்சாளர் ஐவன் டான், கட்டடம் குறிப்பாக எங்கு எழுப்பப்படும் என்பதையோ, அதற்கான கால வரையறைகளையோ வெளியிடவில்லை. கட்டடத்தில் யார் பணியாற்றுவர் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை. “சிஏஜி குழுமம் அதன் அனைத்து சாத்தியங்களையும் மதிப்பிடுகிறது,” என்று மட்டும் அவர் கூறினார்.

குழுமத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியில் கட்டடத்தின் உயரம் 40 மீட்டர் அளவுக்குமேல் இருக்கக்கூடாது எனவும் கூரையில் வைக்கப்படும் கருவிகள், தண்ணீர்த் தொட்டி, மின்தூக்கி இயந்திர அறை போன்றவை அந்த அளவுக்குள் அடங்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் வெளிப்புற வடிவமைப்பு சூரியக் கதிர்களைப் பிரதிபலிக்கச் செய்வதைத் தவிர்க்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது வானில் விமானங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே காரணம்.

மேலும் சாங்கி ராணுவ விமானத் தளத்துக்கு அருகே அமையவுள்ளதால், அங்கு ஏற்படும் அதிர்வுகளையும் சத்தத்தையும் கருத்தில் கொண்டு கட்டடம் எழுப்பப்படவேண்டும் என்று நில மறுசீரமைப்பு ஆணையம் வழங்கிய அனுமதி விதிமுறைகளில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஐந்தாம் முனையம்

வருகின்ற 2030ஆம் ஆண்டு மத்தியில் ஐந்தாம் முனையத்துக்குத் தயாராகி வரும் சாங்கி விமான நிலையம் தற்போதைய 90 மில்லியன் பயணிகளையும் கடந்து அப்போது 140 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, சாங்கி விமான நிலைய முனையம் மூன்று, வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் மேம்படுத்தப்படும் என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்தார். குறிப்பாக உச்ச நேரங்களில் பயணிகள் வருகையைக் கையாளும் திறன்மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று அவர் அப்போது கூறினார்.

குறிப்புச் சொற்கள்
சாங்கி விமான நிலையம்முனையம்மேம்பாடுபயணிகள்விமானப் போக்குவரத்துபோக்குவரத்து அமைச்சு