ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவும் புதிய திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு

ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் உதவும் புதிய திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு

2 mins read
8e6b1e98-64d1-4a9c-ad2b-60c07194ec2d
புதிய திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பு வாழ்க்கைத்தொழிலுக்கான வழிகாட்டுதலை வழங்குவதுடன் திறன் பயிற்சியையும் மேம்படுத்த உதவும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ஊழியரணியையும் ஊழியர்களின் திறனையும் மேம்படுத்தும் புதிய அமைப்பு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் அமைக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மே 5) நிறைவேற்றப்பட்டது.

புதிதாக அமைக்கப்படும் அந்த அமைப்பு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஊழியரணி ஆகிய இரண்டு அமைப்புகளையும் ஒரே கூரையின்கீழ் கொண்டுவருகிறது. வேலைவாய்ப்பு, வேலையில் ஊழியர்களைப் பணியமர்த்துதல், பயிற்சி வழங்குதல் ஆகியவற்றிலும் புதிய அமைப்பு கவனம் செலுத்தும்.

துரிதமாக மாறிவரும் அனைத்துலகச் சூழலைச் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் வேளையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஊழியரணி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள், புவிசார் அரசியல் இடையூறுகள், மூப்படையும் சமூகம் ஆகியவற்றைச் சுட்டிய டாக்டர் டான், பத்தாண்டுக்குமுன் இருந்த உலகத்தைவிட இப்போதைய சூழல் மாறுபட்டுள்ளது என்றார்.

புதிதாக அமைக்கப்படும் திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்பை மனிதவள அமைச்சும் கல்வியமைச்சும் வழிநடத்தும். அந்த அமைப்பு, ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒருங்கிணைந்த, தடையற்ற ஆதரவை வழங்கும்.

மாறிவரும் பொருளியலில் வாழ்க்கைத்தொழில் திட்டம், திறன் மேம்பாடு, வேலை உருமாற்றம் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதன் மூலம் காலத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவும் அமைப்பு உதவும் என்றார் டாக்டர் டான்.

முதலாளிகளைப் பொறுத்தவரை, புதிய அமைப்பு, வேலைக்கு ஆள்களைப் பணியமர்த்துவதற்கான ஆதரவுடன் ஊழியரணி உருமாற்றத்துக்கும் தேவையான உதவியை வழங்கும்.

புதிய அமைப்பை ஏழிலிருந்து 15 உறுப்பினர்கள் கொண்ட வாரியம் நிர்வகிக்கும். அந்த உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பார்.

திறன், ஊழியரணி மேம்பாட்டு அமைப்புக்கான மசோதா தொடர்பில் 20க்கும் அதிகமான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். ஊழியர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அந்த அமைப்பு உண்மையில் கைகொடுக்குமா என்று அவர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் டான், எதிர்கால ஊழியர்களின் திறனையும் அதற்கேற்ற வேலைகளையும் இன்னும் துரிதமாக இணைப்பதற்கான கட்டமைப்பு அவசியம் என்றார்.

குறிப்புச் சொற்கள்