வேலை இழந்த சிங்கப்பூரர்கள் ஏறக்குறைய 60,000 பேர் அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதத்திலிருந்து, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலைதேடுவோருக்கான ஆதரவுத் திட்டத்தின் மூலம் பயனடையவிருக்கின்றனர்.
கடந்த 12 மாதங்களில் சராசரியாக $5,000 அல்லது அதற்குக் குறைவான மாதச் சம்பளம் பெற்றவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவர். அவர்களிடம் சொத்து இருந்தால் அதன் வருடாந்தர மதிப்பு $25,000க்குமேல் இருக்கக்கூடாது.
தகுதி பெற்றவர்களுக்கு ஆறு மாத காலத்தில் அதிகபட்சமாக $6,000 வழங்கப்படும். முதல் மாதம் $1,500 வழங்கப்படும். அடுத்தடுத்த மாதங்களில் அந்தத் தொகை குறைக்கப்படும்.
வேலை தேடுபவரின் முந்தைய சம்பளத்தின் அடிப்படையில் வழங்குதொகைக்கான வரம்பு நிர்ணயிக்கப்படும். அவருக்கு வேலை கிடைத்தவுடன் அந்த வழங்குதொகை நிறுத்தப்படும்.
ஒருமுறை இத்தகைய ஆதரவு நிதியைப் பெற்றவர்கள், அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மீண்டும் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. மற்றபடி, இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவதற்கான வரம்பு ஏதுமில்லை.
வழங்குதொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் குறைந்தது ஆறு மாதங்கள் அவர்கள் பணியில் இருந்திருக்க வேண்டியது அவசியம்.
சிங்கப்பூர் ஊழியரணி இத்திட்டத்தைச் செயல்படுத்தும்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங், ஆகஸ்ட் 27ஆம் தேதி ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள தேவன் நாயர் வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்திற்கு வருகையளித்தபோது இத்திட்டத்திற்கான தகுதி அம்சங்களை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பு ஒன்றை அவர் பார்வையிட்டார்.
முன்னதாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி நிகழ்த்திய தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங், இத்திட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
தாங்களாகவே பணியிலிருந்து வெளியேறாத, தற்போது வேலையில் இல்லாத 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் இத்திட்டத்திற்குத் தகுதிபெறுவர். அதாவது, ஆட்குறைப்புக்கு ஆளானோர், பணி நீக்கம் செய்யப்பட்டோர், நிறுவனம் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு இது பொருந்தும்.
புதிய திட்டம் தொடக்கத்தில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு ஆதரவு வழங்கும். 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து அதே வயதுடைய நிரந்தரவாசிகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு வேலை இழந்த, வேலை தேடும் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் ஒருமுறை மட்டும் சலுகைத் தொகையை வழங்கும். இச்சலுகையைப் பெற அவர்கள் விண்ணப்பிப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் குறைந்தது ஆறு மாதங்கள் பணியாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
கிட்டத்தட்ட 2,000 பேர் இச்சலுகைக்குத் தகுதி பெறுவர் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
புதிய திட்டம், வழக்கமான இடைவெளியில் மறுஆய்வு செய்யப்படும் என்றும் இதனால் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய $200 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

