தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்கத் தீங்குகளைச் சமாளிக்க புதிய அறிவார்ந்த தேசத் திட்டம் அறிமுகம்

2 mins read
d010c707-e27b-47bc-a337-de1dc6ce418c
அறிவார்ந்த தேசம் 2.0 திட்டத் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தனது அடுத்தகட்ட அறிவார்ந்த தேச நடவடிக்கையில் காலடி எடுத்து வைக்கும் வேளையில், இணைய அச்சுறுத்தலாலும் பொய்த் தகவல்களாலும் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையிலான செயற்கை நுண்ணறிவுத் திறன்களை விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் அளிக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுகிறது.

அறிவார்ந்த தேசம் 2.0 திட்டம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமர் லாரன்ஸ் வோங் இதனைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச வர்த்தக வட்டாரம் என்று அழைக்கப்படும் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது.

தற்போது, மூன்று அம்சங்களின்மீது சிங்கப்பூர் தனது கவனத்தைக் கூர்ந்து செலுத்த வேண்டி உள்ளதாக பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டார்.

“2014ஆம் ஆண்டு, முதல் அறிவார்ந்த தேசத் திட்டம் தொடங்கப்பட்டபோது மின்னிலக்கமயம் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. தற்போது, அதற்கும் மேலாக வளர்ச்சி, சமூகம் மற்றும் நம்பிக்கை என்ற அடிப்படையில் இயங்கவேண்டி உள்ளது.

“பத்தாண்டுகளுக்கு முன்பு நாம் நமது முதல் அறிவார்ந்த தேசத் திட்டத்தை அறிமுகம் செய்தபோது இருந்ததைக் காட்டிலும் தற்போதைய மின்னிலக்கத் துறை மிகவும் மாறுபட்டதாக உள்ளது. ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்வதில் திறன்பேசிகளும் சமூக ஊடகங்களும் முக்கிய இடத்தைப் பிடித்து உள்ளன.

“அடுத்தகட்ட திருப்புமுனையாக ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (generative AI) உருவெடுத்துள்ளது. அறிவார்ந்த தேசம் 2.0: அனைவருக்குமான வருங்கால மின்னிலக்க வளர்ச்சி’ என்னும் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு இணங்க, இதுபோன்ற தொழில்நுட்ப மாற்றங்களால் புதிய அச்சுத்தல்களும் உருவாகின்றன.

“குறிப்பாக, மோசடிகள், இணைய அச்சுறுத்தல்கள், போலித்தகவல்கள், வன்போலிகள் (Deepfakes), சமூகத்தைக் கடுமையாகப் பிளவுபடுத்தும் தொழில்நுட்பத் தூண்டலாலான தனிமை போன்றவை மின்னிலக்க வளர்ச்சியால் அதிகரிக்கின்றன.

“அத்துடன், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாததால் வேலை இடையூறுகள் பற்றி ஊழியர்கள் கவலைகொள்கிறார்கள்.

“இத்தகைய சவால்களைச் சமாளிக்கும் வகையில் மின்னிலக்கப் பொருளியலில் சிறந்தோங்க, மின்னிலக்க இணைப்பு மூலம் சமூக உணர்வைப் பேண, இணையப் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்க குடிமக்களுக்குத் திறன்களை அளிப்பதற்கான வழிகளை அறிவார்ந்த தேசம் 2.0 திட்டம் உள்ளடக்கி உள்ளது,” என்றார் திரு வோங்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பயன்படுத்தி இங்கு மேற்கொள்ளப்படும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு புதிய $120 மில்லியன் உதவித் திட்டத்தை பிரதமர் வோங் அறிவித்துள்ளார்.

‘ஏஐ சிங்கப்பூர்’ (AI Singapore) என்னும் தேசிய ஆராய்ச்சித் திட்டத்தின்வழி 2019ஆம் ஆண்டு முதல் ஆய்வு, உருவாக்கத்தில் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள $500 மில்லியன் முதலீட்டிற்கும் மேலாக இந்தப் புதிய உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

“செயற்கை நுண்ணறிவுச் சூழலை வளர்க்க விரும்புகிறோம். முன்கூட்டியே நாம் இதனைத் துவக்கி நமது குழந்தைகளை அதற்கு ஆயப்படுத்த அதிகம் செய்ய வேண்டி உள்ளது,” என்று பிரதமர் திரு வோங் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு வழங்க, ‘ஏஐ ஃபார் ஃபன்’ (AI for Fun) என்னும் புதிய நிரலிடுதல் பாடத் திட்டத்தை தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளன.

குறிப்புச் சொற்கள்