சிங்கப்பூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டுப் புதிய பாடல் காணொளி ஒன்று வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்திய மரபுடைமை நிலையத்தின் பொங்கல் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தக் காணொளி வெளியிடப்படும்.
காணொளிக்கான படப்பிடிப்பு சனிக்கிழமை (ஜனவரி 3) முடிவுற்றது.
லிம் சூ காங் பகுதியில் அமைந்துள்ள விக்னேஷ் மாட்டுப் பண்ணையில் வண்ணமயமான மலர்கள், அலங்காரம், மரத்தால் செய்யப்பட்ட ஒரு மாட்டு வண்டி போன்றவை காணொளிப் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டன.
‘ராயலூஷன்’, ‘மகூலம் கலைக்கூடம்’ நடன அமைப்புகளின் நடனமணிகள் கிட்டத்தட்ட 10 பேர் இந்தப் பொங்கல் பாடல் காணொளியில் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களுடன் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த புகழ்பெற்ற ‘ஹிப்ஹாப்’ நடனக் கலைஞர் சந்தோஷ் குமார் ரங்கசாமி, 29, இணைந்து நடனமாடினார்.
பாடல் காணொளிக்காக கிராமிய நடன பாணியில் ஆடியது இதுவே முதல்முறை என்று கூறினார் சந்தோஷ்.
“முதல் இரண்டு நாள்களுக்கு நடனத்தைக் கற்றுக்கொண்டபோது எனக்குச் சவாலாக இருந்தது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘ராயலூஷன்’ நடன அமைப்பில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடனமாடி வருகிறார் தாரணி குணசேகரன், 21.
“மாட்டுவண்டி போன்ற, படைப்புக்குத் துணைசெய்யும் அம்சங்களை இதுவரையில் நான் நடனத்தில் பயன்படுத்தியதில்லை. அதனால் இது எனக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது,” என்றார் அவர்.
பாடல் காணொளிக்காகப் பொய்க்கால் குதிரையைப் பயன்படுத்தினார் ஜெயஸ்ரீ சுப்பராயலு, 39.
‘மகூலம் கலைக்கூடம்’ நடன அமைப்பின் வழி பரதநாட்டியம் மட்டுமன்றி பறை, கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற நாட்டுப்புற நடனங்களைக் கற்றது இந்தப் பாடல் காணொளிக்கு மிகவும் உதவியாக அமைந்தது என்று அவர் கூறினார்.
மேலும், தனது பதின்ம வயது மகள் வேறோர் அமைப்பின்கீழ் பறை இசைக்கருவியை வாசிக்கக் கற்றுவருவதாகக் கூறினார் ஜெயஸ்ரீ.
“நமது கலை, கலாசாரம் அழிந்து போகாமல் இருக்க பெற்றோராகிய நாம் அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கற்றுத்தர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டின் பொங்கல் பாடல் காணொளியில் இளையர்களின் ஈடுபாடு அதிகம் காணப்பட்டது என்றார் காணொளி இயக்குநர் அனுராதா கந்தராஜூ, 45.
“இளையர்கள் துடிப்பானவர்கள். புதிய யோசனைகளைக் கொண்டு வருபவர்கள்,” என்றார் அவர்.
பல தலைமுறைகள் தாண்டி, தொன்றுதொட்டுக் கொண்டாடப்படும் தைத்திருநாளுக்கு இளையர்களின் பங்களிப்பு புத்துணர்ச்சி தருவதாக அனுராதா குறிப்பிட்டார்.
“இந்தப் பாடல் காணொளி மூலம் அனைவரின் வீடுகளிலும் பொங்கல் பெருநாளின் பேரின்பத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவோமென நம்புகிறோம்,” என்றார் அவர்.

