வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (பிகேஇ) புதிய வேகக் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டில் இருக்கும்.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த போக்குவரத்துக் காவல்துறை எடுக்கும் முயற்சிகளில் இந்நடவடிக்கை அடங்கும்.
டர்ஃப் கிளம் அவென்யூ நுழைவாயிலுக்கு அப்பால் இந்த கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சோதனைக்காகவும் செயல்பாட்டைச் சீராக்கவும் கேமரா, உட்லண்ட்ஸ் வட்டாரத்தை நோக்கிய பிகேஇயின் ஒன்பதாவது கிலோமீட்டர்ப் பகுதியில் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து பொருத்தப்பட்டிருப்பதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அறிக்கை மூலம் தெரிவித்தது.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் பிகேஇயில் 10B நுழைவாயிலுக்கு அருகே வேகத் தடுப்புகளைப் (regulating strips) போட்டது. அதனைத் தொடர்ந்து புதிய வேகக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
அந்த வேகக் கட்டுப்பாடுகள், வளைவான சாலையை நெருங்கும்போது ஓட்டுநர்களை வாகனத்தின் வேகத்தைக் குறைக்கச்செய்யும்.
மேலும், வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்கள் சிங்கப்பூரில் புரிந்த குற்றங்களுக்காகச் செலுத்தவேண்டிய அபராதத்தைக் கட்டாமல் இருந்தால் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் புதிய வாகன நுழைவு அனுமதிக்கு (விஇபி) விண்ணப்பிக்கவோ ஏற்கெனவே இருந்தவற்றைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது. நிலவழி எல்லைகள் வாயிலாக சிங்கப்பூர் வர அந்த வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படலாம்.

