மருத்துவத் தேவை உள்ளவர் என்று சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டிலிருந்து ‘பிஎம்ஏ’ எனப்படும் தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனங்களைப் பயன்படுத்த முடியும்.
மேலும், நடமாட்ட ஸ்கூட்டர்களுக்கும் இதர வகைகளான ‘பிஎம்ஏ’களுக்கும் உள்ள வேக வரம்பு, மணிக்கு பத்து கிலோமீட்டரிலிருந்து மணிக்கு ஆறு கிலோமீட்டராகக் குறைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் மார்ச் 5ஆம் தேதி நடந்த போக்குவரத்து அமைச்சின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இவ்விவரங்களைக் கூறினார்.
நடக்க முடியாத அல்லது நடமாடுவதில் சிரமம் உள்ளவருக்கென மோட்டார் பொருத்தப்பட்ட மற்றும் மோட்டார் அல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாட்ட ஸ்கூட்டர்களும் சக்கர நாற்காலிகளும் தற்போதைய சட்டத்தின்படி, ‘பிஎம்ஏ’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை நடைபாதைகளிலும் மிதிவண்டிப் பாதைகளிலும் மட்டுமே செலுத்த முடியும்.
நடைபாதைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதும் ‘பிஎம்ஏ’க்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும், தனிநபர் நடமாட்ட ஸ்கூட்டர்களின் பயனாளர்கள் நடமாடுவதில் சிரமம் உள்ளவர் என்று மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இது 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து நடப்புக்கு வருகிறது.